மும்பை:

மும்பை முதல் அகமதாபாத் வரையிலான புல்லட் ரயில் சேவையை ஜப்பான் முற்றிலும் இலவசமாக செயல்படுத்துவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 50 ஆண்டு கால கடன் அடிப்படையில் தான் இத்திட்டம் செயல்படுத்துகிறது. ஜப்பானின் யென் மதிப்பில் ரூ. 88 ஆயிரம் கோடியை 0.1 சதவீத வட்டியுடன் இந்தியா திருப்பி செலுத்த வேண்டும். அதனால் மோடியின் அறிவிப்பு வெளிப்படையான அபத்தமானதாகும்.

இது போன்று பல புல்லட் ரயில் சேவைகள் இந்தியாவுக்கு அவசியம் தான். ஆனால், அதை இலவசம் என்று கூற மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது என்ற கருத்துக்கள் எழுந்துள்ளது. அதோடு தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கடன் தொகையை விட பல மடங்கு கூடுதலாக தான் இந்தியா திருப்பசெலுத்த வேண்டி வரும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் யென்னுக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு எப்போதும் இறங்கு முகமாக தான் இரு ந்துள்ளது. இரு நாட்டு நாணய மதிப்பு என்பது பணவீக்கத்தை பொருத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளாக யென் மதிப்பை விட ரூபாய் மதிப்பு ஆண்டுதோறும் 3 சதவீதம் குறைவாகவே இருந்துள்ளது.

அதனால் அடுத்த 20 ஆண்டுகளில் பணவீக்கத்தின் அளவு 60 சதவீதமாக இருக்கும். இதனால் 88 ஆயிரம் கோடி ரூபாயை விட இந்தியா 20 ஆண்டுகளில் 1.50 லட்சம் கோடி ரூபாயை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

20 ஆண்டுகளிலேயே இந்த நிலை என்றால் 50 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை எவ்வளவு இருக்கும் என்று தற்போது மதிப்பிட முடியாது என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளது. இந்த கடன் திட்டம் அகமதாபாத்&மும்பை இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கான குறுக்கு வழி தான்.

இதேபோன்று தெற்கு, வடக்கு, கிழக்கு போன்ற பகுதிகளை இணைக்கும் வகையில் ஜப்பான் மேலும் 3 புல்லட் ரயில் திட்டங்களை நிறைவேற்றினால் இந்தியாவின் வெளிநாட்டு கடன் சுமை அதிகரிக்கும்.