டில்லி
மத்திய அரசு ஜி எஸ் டி வரி விகிதங்களை அடிக்கடி மாற்றி அமைப்பதால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அஞ்சுகின்றனர் என ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜி எஸ் டி கவுன்சில் கடந்த வாரம் கார்களுக்கான கூடுதல் வரிகளை மாற்றி அமைத்தது. நடுத்தர வகை கார்களுக்கு 2 % கூடுதல் வரி அதிகமானது. அதே போல பெரிய வகை கார்களுக்கு 5% உம், சொகுசு கார்களுக்கு 7% உம் கூடுதல் வரி உயர்ந்துள்ளது. இது குறித்து இந்தியாவில் கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹுண்டாய் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியுட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “ஜி எஸ் டி வரி அமுலாக்கப்பட்டது ஒரே வரி மற்றும் சுலபமான வரி விகிதம் என்னும் அடிப்படையில் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வரிவிகிதங்கள் அடிக்கடி மாற்றி அமைக்கப் படுகிறது. ’செஸ்’ என்னும் கூடுதல் வரி கடந்த வாரத்தில் இருந்து கார்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கார் உற்பத்தித் தொழிலை பாதிக்கக் கூடும்.
தற்போது பண்டிகைக் காலம் வர இருப்பதால் மிகுந்த அளவில் கார் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் தற்போது வரி விகிதம் உயர்த்தப்பட்டதால் மொத்த ஜி எஸ் டி நடுத்தர கார்களுக்கு 45% ஆகவும் பெரிய கார்களுக்கு 48% ஆகவும் சொகுசுக் கார்களுக்கு 50% ஆகவும் ஆகி விட்டது. இது கார்களின் விலையை உயர்த்தும் என்பதால் வர்த்தகம் மிகவும் அடிபட்டுப் போகும்.
அது மட்டுமின்றி வரி விகிதத்தில் மாறுதல் இருப்பதால் வர்த்தகத்திலும் மாறுதல் உண்டாகும். இது முதலீட்டாளர்கள் மனதில் அச்சத்தை உண்டாக்கும். எனவே முதலீடுகள் குறைய நிறைய வாய்ப்புள்ளது. ஒரு நிச்சயமான வருமானம் வரும் என தெரியாத துறைகளில் முதலீடு செய்ய யாரும் முன் வருவதில்லை” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.