டில்லி:
‘‘இந்தியாவின் வளர்ச்சி கீழ் நோக்கி சென்றிருப்பது கவலை அளிக்கிறது. நாட்டின் வளர்ச்சியை பணமதிப்பிழப்பு தடுத்து நிறுத்திவிட்டது’’ என்று உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணரும், தற்போதைய நியூயார்க் மற்றும் இதாகா கார்நல் பல்கலைக்கழக பொருளாதார துறை பேராசிரியருமான கவுசிக் பாசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் மேலும் கூறுகையில், ‘‘இந்த மிகப்பெரிய விலையை பணமதிப்பிழப்பு முடிவுக்காக நாடு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3வது காலாண்டில் உற்பத்தி குறைந்திருப்பதோடு, பணமதிப்பிழப்பின் தாக்கமும் வெளிப்பட்டுள்ளது.
கீழ் நோக்கி திரும்பியுள்ள நாட்டின் வளர்ச்சி கவலை அடைய செய்துள்ளது. பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட எதிர்மறை அதிர்ச்சியால் நாட்டின் மொத்த உற்பத்தில 6 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட 5.7 சதவீதமாக குறைந்துள்ளது’’ என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘2003ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நாட்டின் சராசரியான வளர்ச்சி ஆண்டுக்கு 8 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. 2008ம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச நெருக்கடி காரணமாக நாட்டின் மொத்த உற்பத்தி 6.8 சதவீதமாக குறைந்தது. எனினும் 8 சதவீத வளர்ச்சி இந்தியா தக்க வைத்துக் கொண்டது.
தற்போது கச்சா எண்ணை விலை குறைந்துள்ளது. சீனாவும் இந்தியாவுக்கான இடத்தை விட்டுக் கொ டுத்துள்ளது. இதனால் வளர்ச்சி 8 சதவீதத்தை தாண்டியிருக்க வேண்டும். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து 2.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு பணமதிப்பிழப்பு தான் காரணம். இது அதிகப்படியான விலை தான். பணமதிப்பிழப்பின் தவறுகள், ஏற்றுமதி உள்ளிட்ட அனைத்து துறைகளில் செயல்பாடு குறைவு போன்றவை நிலைகுலைய செய்துள்ளது. இந்த தவறுகள் சரி செய்யப்படலாம்’’ என்றார்.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிட்ட பின் புழக்கத்தில் இருந்த 99 சதவீத 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கவுசிக் பாசு மேலும் கூறுகையில், ‘‘ பணமதிப்பிழப்புக்கு பின் பணக்காரர்கள் தங்களது பணத்தை திரும்ப தக்க வைத்துக் கொண்டுள்ளனர். சிறு வர்த்தகர்கள், முறைசாரா துறையினர் மறறும் ஏழைகள் தான் அதிகம் சிரமப்பட்டனர். தற்போது 2 நல்ல கொள்கை முடிவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று ஜிஎஸ்டி. மற்றொன்று புதிய திவால் சட்டம்.
இந்த சூழ்நிலையில் பணமதிப்பிழப்பு போன்ற புதிய தவறுகளை அடுத்து செய்யாமல் இருந்தால் 2018ம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் தக்க வைக்க முடியும். எனினும் அடுத்த இரண்டு காலாண்டு வளர்ச்சி மோசமானதாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் குறைவான சரிவு இருக்கும்.
கடந்த ஆண்டில் விவசாயிகள் அதிகளவில் பாதித்துள்ளனர். சாதாரண மக்களின் வாங்கும் திறன் பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டது. இதனால் அதிகம் உற்பத்தி செய்திருந்த விவசாயிகள் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் போனது. இதன் பின்னடைவை இந்த ஆண்டின் இறுதியில் சந்திக்க நேரிடும்’’ என்றார்.
‘‘ரொக்க பரிவர்த்தனையில் இருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வேகமாக மாறுவதில் எச்சரிக்கையாக இரு க்க வேண்டும். குறிப்பாக, இதில் வளர்ந்த நாடுகளே இதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டு வருகிறது. இந்தியாவில் சுமாராக 50 சதவீத மக்கள் வங்கி கணக்கு கூட இல்லாத நிலை உள்ளது. அதனால் திடீரென டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவது என்பது அர்த்தமற்றது.
இது ஏழைகளுக்கு எதிரான கொள்கை முடிவாகும். இதனால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதுபோன்ற சில தவறான முடிவுகளை தவிர்த்தால் 2018ம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் குறிப்பிட்ட வளர்ச்சியை சந்திக்கும்.
கடந்த நவம்பர் மாதத்தில் குறைந்த மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பண புழக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். இந்திய உற்பத்தியாளர்களை மீட்டெடுக்க கூடுதல் பணப் புழக்கம் தான் உதவி புரியும். அதேபோல் ஏற்றுமதி துறையை ஊக்குவிக்கும் வகையில் நிதி மற்றும் பணயவியல் கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சாதாரண மக்கள் வாங்கும் திறனை இழந்ததால் உற்பத்தி துறை அதிகளவில் பாதித்துள்ளது. இதற்கு மறுவாழ்வு அவசியம். ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்றால் தொழில் செய்வதை எளிமையாக்க வேண்டும். அதேசமயம் ரூபாய் மதிப்பு செயற்கை வலுகொண்டதாக இருக்கிறது. இது ஏற்றுமதியின் திறனை பாதிக்கிறது’’ என்று கவுசிக் பாசு தெரிவித்துள்ளார்.