சென்னை,

ரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில்,  அ.தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினா்கள், முக்கிய நிர்வாகிகள்  கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டுவது குறித்தும், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்தும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.  தற்போது ஆட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து சசிகலா குடும்பத்தினரை  கட்சி  பணிகளில் இருந்து தள்ளி வைத்துள்ளனர்.

ஆனால், சசிகலாவால் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன், தனக்கென தனி லாபியை, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் உருவாக்கி, ஆட்சிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்துள்ளார்.

மேலும், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவரும், திவாகரனும் மாறி மாறி செய்தியாளர்களிடம் வெளியிட்டு அதிமுகவில் குழப்பத்தை விளைவித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகளுக்கு புதியதாக பதிவுகளும் வழங்கி வருகின்றார்.  மாவட்ட நிா்வாகிகள், பொறுப்பாளா்களை மாற்றியமைத்து வருகிறாா்.

அதிகபட்சமாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கு வதாக டிடிவி அறிவித்தார்.

இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள் கடும் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளார்கள்.

அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், டிடிவி தினகரனின் அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆலோசனை கூட்டம் முடிவடைந்தவுடன், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்றும், கட்சியின் பொதுக்குழு எப்போது கூட்டப்படும்,  அதன் வாயிலாக சசிகலா குடும்பத்தினரை கட்சி பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்தும் அடியோடு நீக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.