புதுச்சேரி :
டிடிவி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் சின்னவீராம்பட்டினம் தி விண்ட் ஃப்ளவர் ரெசார்ட் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அந்த பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் புதுச்சேரி தி விண்ட் ஃப்ளவர் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பாக வெற்றிவேல் தலைமையிலான சென்னையை சேர்ந்த அடியாட்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, புதுச்சேரி ரிசாட்டும் மினி கூவத்தூராக மாறி உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியையை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் இன்று காலை திடீரென அங்கு திரண்டு டிடிவிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் தலைமையிலான அதிமுகவினர் கட்சிக் கொடியேந்தி ரெசார்ட் நோக்கி பேரணியாக சென்றனர்.
போலீசார் அவர்களை பேரிகாட் வைத்து தடுத்து நிறுத்தினர். எனினும் தடுப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு சென்றனர்.
மேலும், டிடிவி. தினகரனின் படங்களை கையில் வைத்துக் கொண்டு அவற்றை காலணியால் அடித்ததோடு தீ வைத்தும் கொளுத்தினர்.
எனினும் ரிசார்ட் நுழைவு வாயில் அருகே போலீசார் பேரிகாட் அமைத்ததால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் பேரிகாட் மீது ஏறி நின்று ஓம்சக்தி சேகர் தினகரனை கடுமையாக விமர்சித்தார்.
ரிசார்ட்டில் தங்கியிருப்பவர்கள் வெளியே வரவேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஓம்சக்தி சேகர், சசிகலா ஒழிக, தினகரன் ஒழிக என்று கோஷங்களை எழுப்ப அதிமுகவினர் அதனை கூறினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.