சென்னை:
அதிமுக.வின் இரு அணிகள் இணைப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், ‘‘இன்று அதிமுகவின் இரு அணிகள் இணைந்து தங்களுக்கிடையில் ஆட்சியதிகாரப் பதவிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இது அதிமுகவைக் கட்டுக்கோப்பாக வலுப்படுத்திப் பாதுகாக்குமா? அதிமுக அரசையும் அதன் ஆயுள்வரையில் காப்பாற்றுமா? அல்லது திருமதி சசிகலா- டிடிவி. தினகரன் தரப்பினரால் அதிமுக உடைந்து புதிய அணி உருவாகுமா? அதனால் ஆட்சிக் கவிழுமா?
இந்த இணைப்பின் பின்னணியில் பிரதமர் மோடி இருப்பது உண்மையா? பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த இரு அணியினருக்கும் ஆலோசனைகள் வழங்கியதன் பின்னணி என்ன? அவர் யாருடைய பிரதிநிதியாக இருந்து செயல்படுகிறார்?
சசிகலா- தினகரன் தரப்பினரை நீக்கவேண்டும் என்பது மோடி விடுக்கும் அச்சுறுத்தலின் விளைவா? அல்லது அதிமுகவையும் அதிமுக அரசையும் பாதுகாக்க வேண்டுமென்கிற நோக்கத்தின் விளைவா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘இரு அணியினரின் இணைப்பால் அதிமுக தொண்டர்களை விடவும், தமிழக மக்களை விடவும் பிரதமர் மோடி அவர்கள் மட்டும் வெகுவாகப் பூரிப்படைவது ஏன்? துணை முதல்வருக்கு மட்டுமின்றி அமைச்சர்களுக்கும் கூட பிரதமர் வாழ்த்துகளைச் சொல்வது ஏன்?. இப்படி ஏராளமான கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன.
அதிமுக மற்றும் அதிமுக அரசு ஆகியவற்றின் நலன்கள் பாதுகாக்கப்படுமா. இல்லையா? -என்பது ஒருபுறமிருந்தாலும், தமிழக மக்களின் நலன்கள் பற்றி நாம் கவலைப்படாமல் இருக்கமுடியுமா? தற்போதைய சூழலில், பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகள் தமிழக அரசியலில் காட்டும் தீவிரமான ஈடுபாட்டினையும் அதன் தீவிரத்தையும் புரிந்து கொள்ள வேண்டியது தான் நமது கடமையாக உள்ளது’’ என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘அதிமுகவில் சுயமாக இயங்கும் ஆற்றலுள்ள தலைமை இருக்கக்கூடாது என்பதே இன்றைக்கு மோடியின் விருப்பமாக உள்ளது. அதிமுக அரசை பாரதிய ஜனதாவின் ஒரு பினாமி அரசாகக் கையாள வேண்டுமென்பதும் அதன்மூலம், தேர்தலுக்கு முன்னதாகவே இங்கு அமைப்புரீதியாக பாரதிய ஜனதாவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதும் அவர்களின் திட்டம்.
இதனடிப்படையில்தான் இன்று அதிமுக அணிகளின் இந்த இணைப்புக் காட்சி அரங்கேறியுள்ளதாகத் தெரிகிறது. இந்த நெருக்கடியை சசிகலா,- தினகரன் தரப்பினர் எவ்வாறு கையாளப்போகின்றனர் என்பதைப் பொறுத்துதான் மோடியின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.
அதிமுக பலவீனமாவது அதிமுகவை மட்டும் பாதிக்காது. தமிழக அரசியலிலும் இது பெரும் தாக்கத்தை உருவாக்கும். குறிப்பாக, சாதியவாத- மதவாத சக்திகள் தலைதூக்குவதற்கும் வலுப்பெறுவதற்கும் வழிவகுக்கும். இதனைக் கருத்தில் கொண்டே இந்தக் காட்சிகளைக் கவனிக்கவும் அணுகவும் வேண்டும்’’ என்று தெரிவித்தார்.