அ.தி.மு.க. பொதுக்குழு கூடி பொதுச்செயலாளர் சசிகலா பதவி பறிக்கப்படும் என்றும் அ.தி.மு.க. எம்பி. வைத்தியலிங்கம் தெரிவித்திருக்கிறார். துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பதவியும் பறிக்கப்படும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
இவர்கள் இருவருக்கு அடுத்தபடியாக இரு அணியைச் சேர்ந்தவர்களும் கடும் கோபத்தில் இருப்பது தளவாய் சுந்தரத்தின் மீதுதான். தினகரன் அணியைச் சேர்ந்த இவர், எடப்பாடி உள்ளிட்டோரிடம் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வந்தவர். அதாவது தினகரன் சார்பாக.
ஆகவே சசிகலா, தினகரன் ஆகியோருக்கு அடுத்தபடியாக தளவாய் சுந்தரம் வகிக்கும் டில்லி சிறப்பு பிரதிநிதி பதவியை அவரிடம் இருந்து பிடுங்க வேண்டும் என்பதே ஓ.பிஎஸ். – ஈ.பி.எஸ். அணியினரின் திட்டம்.
ஆக… சசிகலா, தினகரனுக்கு அடுத்தபடியாக பதவி பறிபோகப்போவது தளவாய் சுந்தரத்துக்குத்தான்.
அதே நேரம், “சசிகலா, தினகரன் ஆகியோரின் பதவி கட்சிப்பதவி. ஆகவே அதற்கு பொதுக்குழுவைக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் டில்லி பிரதிநிதி என்பது அரசு ரீதியான பதவி. ஆகவே முதல் நபராக அவரது பதவிதான் பறிக்கப்படும். அவருக்குப் பதிலாக முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் நியமிக்கப்படுவார்” என்றும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.