ன்று தமிழகத்தின் மிக முக்கியமான கேள்விகளுள் ஒன்று….  பாடலாசிரியர் சிநேகன் குடும்பத்தை பிக்பாஸ் தொடர்புகொள்ள முடியாதது ஏன் என்பதுதான்.

“பிக்பாஸ்” நிகழ்ச்சியில் சிநேகன்

பிக்பாஸ் தொடரில், பங்குபெற்றிருப்பவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பரிசுகள் கொடுத்து, அவர்களது குரலை பதிவு செய்து, ஒலிபரப்பப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் பங்குபெற்றிப்பவர்களில் முக்கியமானவரான பாடலாசிரியர் சிநேகனின் குடும்பத்தினரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக சிநேகனும், “ஊரைவிட்டு வந்து 15 வருடங்களாகிவிட்டன. அண்ணண், அண்ணி, குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்போல் உள்ளது” என்று கண்ணீர் மல்க கூறினார்.

இதனால், குடும்பத்தாருடன் முற்றிலும் தொடர்பற்று போய்விட்டாரோ சிநேகன்… அதனால்தான் அவருடைய குடும்பத்தினருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களால் தொடர்புகொள்ள முடியவில்லையோ என்ற கேள்வி நேயர்களுக்கு எழுந்தது.

சிநேகனின் பூர்வீக வீடு

மிக முக்கியமான கேள்வியாச்சே… நேயர்களுக்கு, வாசகர்களுக்கு இதற்கான பதிலைத் தேடித் தருவது நம் கடமையல்லவா?

ஆகவே சிநேகனின் சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்தோம்.

தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் புதுக்கரியப்பட்டிதான் சிநேகனின் சொந்த ஊர்.

தஞ்சை நகரத்திலிருந்து திருச்சி சாலையில் 34 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருப்பது செங்கிப்பட்டி. பிரதான சாலையில் இருக்கும் மிகப் பின்தங்கிய கிராமம். அங்கிருந்து மூன்றரை கி.மீ. தூரத்தில் இருப்பது புதுக்கரியப்பட்டி. பேருந்து வசதிகள் கிடையாது. ஒற்றையடிப் பாதையைவிட சற்றே அகலமான குறுஞ்சாலை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை இரு புறமும் ஓங்கி வளர்ந்திருக்கும் கருவேல மரங்கள்,” இது கடும் வறட்சிப்பகுதி” என்று கட்டியங்கூறுகின்றன.

களைத்துப்போய் புதுக்கரியப்பட்டியை அடைந்து, எதிர்ப்பட்ட இளைஞர் ஒருவரிடம் “பாடலாசிரியர் சிநேகன் வீடு எது” என்று கேட்டால்.. “அதோ.. அந்த பெரிய மாடிவீடுதான்” என்று சுட்டிக்காட்டுகிறார்.

தன் சகோதரர்களுக்காக சிநேகன் கட்டிய வீடு

வெள்ளை நிறத்தில் கம்பீரமாய் நிற்கிறது வீடு. ஆட்கள் நடமாட்டம் இல்லை. கொஞ்ச தூரம் நடந்து, ஒரு வீட்டில்  விசாரித்தோம். அங்கிருந்த பெண்மணி, “ஓ.. செல்வத்தோட வீட்டுக்கு வந்திருக்கீங்களா..” என்றார். சிநேகன் இயற்பெயர் செல்வம்.

அந்த பெண்மணி, எதிர்ப்புறம் இருந்த குடிசை வீட்டிலிருந்த ஒருவரை அழைத்துவந்தார். அவர், “என் பெயர் கருணாநிதி. சிநேகனின் அண்ணன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பிறகு, “வாங்க.. பெரிய வீட்டுக்குப்போவோம்” என்று அந்த வெள்ளை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

பெரிய வராந்தாவில், ஓர் ஓரத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார் ஒரு பெரிவர்.

சிவசங்கு

“இவர் எங்க அப்பா சிவசங்கு. வயது நூறுக்கு மேல ஆகுது..” என்ற கருணாநிதி தங்களது குடும்பத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்:

“விவசாய குடும்பம். இப்போ ரெண்டு வருசமா தண்ணி இல்லாததால விவசாயம் கடுமையா பாதிச்சிருக்கு. குழந்தைய்யா, நான் ( கருணாநிதி), நாகராஜ், கண்ணையன்.. எல்லோரும் உடன் பிறந்தவங்க. கடைசி தம்பிதான் செல்வம் (சிநேகன்.) ஒரு அக்கவும் இருக்காங்க.

சிநேகனைத் தவிர எல்லோருமே விவசாயம்தான். இங்க பக்கம் பக்கமாத்தான் இருக்கோம். சிநேகனுக்கு சின்ன வயசிலேயே தமிழ் ஆர்வம் அதிகம். எப்பவும் கதை, கவிதைன்னு எழுதிக்கிட்டே இருப்பான்.  கவிதைப் போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசுங்களும் வாங்கியிருக்கான்.

சினிமாவுல ஜெயிக்கணும்னு சென்னைக்குப் போனான். ஆரம்பத்துல பாட்டுங்க எழுதினான். பிறகு நடிக்கவும் வாய்ப்பு வந்துச்சு. இன்னைக்கு பிக்பாஸ் வரைக்கும் வந்துட்டான்..” என்றார் கருணாநிதி.

“நீங்க பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கிறது உண்டா” என்றோம்.

குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் உறவுகளுடன் சிநேகன் ( பழைய படம்)

“ம்.. வீட்டில எல்லோரும் பார்ப்போம்…”  என்றார்.

“பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஊரைவிட்டு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது என்று கண் கலங்க பேசினார் சிநேகன். அதோடு, “சிநேகன் குடும்பத்தைத் தொடர்புகொள்ள முடியவில்லை” என்று அந்நிகழ்ச்சியில் அறிவித்தார்கள். இதனால் சிநேகனுக்கும் குடும்பத்துக்கும் தொடர்பே இல்லையே என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறதே” என்றோம்.

கருணாநிதி

அதற்கு கருணாநிதி, “அப்படி எல்லாம் இல்லை. குடும்பத்தினர் மீது சிநேகனுக்கு ரொம்பவே பாசம் உண்டு.  எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கி வச்சுட்டு, வருடா வருடம் பொங்கல் பண்டிக்கைக்கு தஞ்சை வந்திருவான். இடையிலும் வாய்ப்பு இருக்கும் போது வீட்டுக்கு வந்துட்டு போவான்” என்றார் சிநேகனின் அண்ணன் கருணாநிதி.

சிநேகனின் அண்ணன் மகன் கார்த்தியும் இதையே சொல்கிறார். மேலும், “சிநேகன் சித்தப்பா, தன்னோட அண்ணன்கள் எல்லோரும் ஒண்ணா இருக்கணும் என்றுதான் இந்த பெரிய வீட்டைக் கட்டித்தந்தார். தனித்தனியா வீடு கட்டித்தரலாமேனு சில பேரு சொன்னாங்க. ஆனா சிநேகன் சித்தப்பா ஒத்துக்கலை. எல்லோரும் ஒண்ணா ஒரே வீட்டில இருக்கணும்னு சொல்லி இந்த வீட்டைக் கட்டிக்கொடுத்தாரு. அந்த அளவுக்கு குடும்பத்துமேல பாசம் உள்ளவரு சித்தப்பா. அதே போல நாங்க எல்லாருமே அவர் மேல அத்தனை அன்பு வச்சிருக்கோம்” என்றார்.

மேலும் அவர், “அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில ஊரிலேருந்து வந்து 15 வருசம் ஆச்சுன்னு சிநேகன் சித்தப்பா சொன்னாரே தவிர, இடையில ஊருக்கே போகலைன்னு சொல்லலியே” என்றார்.

கார்த்தி

அவரிடம், “பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் சிநேகன் குடும்பத்தை தொடர்புகொள்ள முடியவில்லை என்றார்களே…” என்றோம்.

அதற்கு அவர், “அன்றைக்கு எங்க செல் நம்பர் எதுக்கும் தொடர்பு கிடைக்காம போச்சு. அதனால அப்படிச் சொல்லிட்டாங்க” என்றார்.

சிநேகனின் அண்ணன் கருணாநிதி, “பிக்பாஸ் ஆளுங்க எங்க ஊருக்கு வந்தப்போ, நாங்க ஒரு துக்க நிகழ்ச்சிக்காக போயிட்டோம். வீட்ல யாரும் இல்லை.. அதான் தொடர்புகொள்ள முடியலை என்று சொல்லிட்டாங்க” என்றார்.

ஆக.. சிநேகன் குடும்பத்தினரை பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் தொடர்புகொள்ள முடியாததற்கான காரணங்கள் தெரிந்துவிட்டன. குடும்பத்துடன் தொடர்பில்தான் இருக்கிறார் என்பதும் தெரிந்துவிட்டது. மகிழ்ச்சியில் சென்னை திரும்பினோம்.