கொல்கத்தா:
மத்திய பாஜ அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களிலும் தொடர்ந்து எதிர்ப்பு நிலையை கடைபிடித்து வந்தார்.

இந்நிலையில் மம்தா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘நான் மோடியை ஆதரிக்கிறேன். ஆனால் அமித்ஷாவை ஆதரிக்கவில்லை. நான் பிரதமரை குற்றம் சொல்ல மாட்டேன். அவரை எதற்காக குற்றம் சொல்ல வேண்டும். அவர், தனது கட்சி சொல்வதன் பேரில் நடக்கிறார். நாட்டில் சர்வாதிகார சூழல் ஏற்பட்டுள்ளதற்கு அமித்ஷா தான் காரணம்’’ என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘வாஜ்பாயும் பா.ஜ.க தான். ஆனால் அவர் நடுநிலையாக செயல்பட்டவர். அவரது ஆட்சியில் நாங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தோம். பா.ஜ. தான் நாட்டில் அத்தனை பிரச்னைகளையும் உருவாக்குகிறது. பிரதமர் மோடி அல்ல. கட்சி தலைவர்கள் எப்படி அமைச்சர்களை சந்திக்கலாம்?. பிரதமர் மோடியா அல்லது அமித்ஷாவா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
மம்தாவின் இந்த திடீர் மாற்றம் தேசிய அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.வை கடுமையாக எதிர்ப்பதால் மம்தா, காங்கிரசுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், மோடியை ஆதரித்து மம்தா பேசி உள்ளது எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.