சென்னை,
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், நெல்லை மாவட்ட முன்னாள் செயலாளருமான நயினார் நாகேந்திரன் பாரதியஜனதா கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுக-வின் நெல்லை மாவட்டப் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் சமீப காலமாக அமைதியாக இருந்து வருகிறார். அவருக்கு சசிகலா மீண்டும் பொறுப்பு கொடுத்துள்ள நிலையில், அவர் எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் இருந்து வருகிறார்.
தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக, தனது கடைக்கண் பார்வையை பாரதியஜனதா நோக்கி வீசுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் தனது கட்சிக்கு ஆள் பிடிக்கும் வேலையில் தீவிரமாக வலைவீசி வரும் பாரதியஜனதாவுக்கு, முதன்முதலாக நெல்லை மாவட்டத்தில் இருந்து பெரிய மீன் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக அவருடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வரும் 22ந்தேதி தமிழகம் வரும் பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பாரதியஜனதாவில் தன்னை ஐக்கியமாக்கி கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
ஒருகாலத்தில் அதிமுகவில் தென்மாவட்ட செயலாளராக கோலோச்சி வந்த நயினார் நாகேந்திரன், 19 89ல் அதிமுக-வில் அடிப்படை உறுப்பினராக இணைந்து, பின்னர் பணகுடி நகரச் செயலாளராக பதவி வகித்தார். அதையடுத்து இளைஞரணிச் செயலர், பின்னர் திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர், ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலர், இடையில் தேர்தல் பிரிவு இணைச் செயலர், மீண்டும் ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலர் என்று கட்சிப் பதவிகள் வகித்தார்.
2001ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். இதன் காரணமாக அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.
பின்னர் 2006ல் மீண்டும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர், 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி அடைந்ததால், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
பின்னர் ஜெ.மறைவை தொடர்ந்து சசிகலா அவருக்கு, கழக கொள்கைபரப்புத் துணைச் செயலாளராக நியமித்தார். ஆனால், அவர் கட்சி பணிகளில் இருந்து தற்போது வரை ஒதுங்கி இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பாரதியஜனதாவின் தூண்டிலில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.