
டில்லி
பள்ளிகளில் யோகாவை கட்டாயம் ஆக்க வேண்டும் என பா ஜ க பிரமுகர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

பா ஜ க வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாய் மற்றும் ஜே சி சேத் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், “அரசுக்கு அனைத்து மக்களுக்கும், குறிப்பாக மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதார வசதிகள் எற்படுத்தித் தரும் கடமை உண்டு. மக்களுக்கு நல்ல உடல்நலத்துடன் வாழ யோகா பயிற்சி என்பது முக்கியமான ஒன்றாகும். இதனால் அனைத்து பள்ளிகளிலும், குறிப்பாக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயம் ஆக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்து தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பில், “நீதிமன்றம் எந்த பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு ஆணையிட முடியாது. அதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும். எந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை அல்ல. எனவே இந்த நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறது. மேலும் இதை அரசுக்கு அனுப்பி அவர்கள் முடிவு செய்யவேண்டும் என பரிந்துரைக்கிறது” என குறிப்பிட்டுள்ளது.