நெட்டிசன்:
அப்துல்கலாம் நினைவு மண்டபம் அமைந்துள்ள பேக்கரும்பில் கடந்த வாரம் அவரது நினைவு நாளன்று பிரதமர் மோடி கலந்துகொண்டு, அவரது சமாதியில் மரியாதை செலுத்தி, நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார்.
இந்நிலையில் நினைவு மண்டபத்தில் திறக்கப்பட்ட கல்வெட்டில் வரலாற்று பிழை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், அதுவும் தமிழகத்திற்கு பெருமை சேர்ந்த அணுவிஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதிக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் திறக்கப்பட்ட கல்வெட்டில், தமிழக முதல்வரின் பெயரை சிறியதாக அச்சிட்டு, வரலாற்று பிழையை செய்துள்ளது மத்திய அரசு.
ஒரு ஜனநாயக நாட்டில், ஜனாதிபதி, பிரதமருக்கு அடுத்ததாக முதல்வர்தான் முக்கிய இடத்தை பெறுகிறார். இடையிலேயே கவர்னரும் மத்தியஅரசின் கைப்பாவையாக அவ்வப்போது வருகிறார். அதன்பிறகுதான் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் இடம்பெறுவதுதான் மரபு.
தற்போது அப்துல்கலாம் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், பிரதமர், கவர்னர் இருவருடைய பெயரும் பெரிய எழுத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து தமிழக முதல்வர் பெயரும், அவர்களுக்கு சமமான எழுத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆனால், நமது தமிழ்நாட்டின் தலையாட்டி முதல்வரால், அவரது பெயர் வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டில் சிறியதாக பதிவு செய்யப்பட்டு தமிழகர்களை ஏளனப்படுத்தி உள்ளது மத்திய அரசு.
இது ஒவ்வொரு தமிழனுக்கும் தலைகுனிவு. அதுவும் இது தமிழக முதல்வருக்கு வெட்கக்கேடு. அதுவும் மத்திய அமைச்சர்களின் பெயர்களுக்கு சமமாக பதிவு செய்து, தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் வேண்டுமென்றே இழிவுபடுத்தி உள்ளனர் மத்திய அரசு அதிகாரிகள்.
ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி ஒரு வரலாற்று பிழை ஏற்பட்டிருக்குமா? அவரும் விட்டிருப்பாரா?
கல்வெட்டில் அவரது பெயர் மட்டும்தான் பதியபட்டிருக்கும் என்பதே நிதர்சனம். மோடி பிரதமராக இருப்பதால்… அவரது பெயரை வேண்டுமென்றால் பதிவு செய்திருக்கலாம்… மற்ற எந்தவொரு மத்திய, மாநில அமைச்சர்களின் பெயரும் பதிவு செய்யப்பட்டிருக்காது என்பதே உண்மை.
தமிழகத்தின் உரிமையை ஒவ்வொன்றாக மத்தியஅரசிடம் அடகு வைத்துக்கொண்டிருக்கும் எடப்பாடி அரசு, தற்போது தமிழக முதல்வரின் அதிகாரித்தையும் அடகு வைத்துள்ளது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதுதான் சென்னையில் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் திறக்கப்பட்டது. அந்த கல்வெட்டை பார்த்தோமானால், பிரதமர் நரசிம்மராவ், கவர்னர் பீஷ்மநாராயண்சிங், அடுத்து முதல்வர் ஜெயலலிதா. இவர்களின் பெயர்கள் ஒரே அளவிலான எழுத்தில் பதிவு செய்திருப்பதை காணலாம். அவரின் பெயருக்கு கீழேதான் மத்திய அமைச்சர் அர்ஜுன்சிங் பெயர் அமைந்துள்ளது.
இதுதான் வரலாறு. இப்படி இருக்கையில், தமிழக முதல்வருக்கோ, அரசு அதிகாரிகளுக்கோ, தமிழக முதல்வர் பெயரி இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் தலைகுனிந்து நிற்கிறார்களா…..?
நடிகர் கமல் போன்ற சாதாரண குடிமகன்களுக்கு எதிர்குரல் குரல் கொடுக்கும் நமது அமைச்சர்கள், ஒரு மாநிலத்தின் முதல்வர் பெயரையே இழிவுபடுத்தி வரலாற்று பிழை செய்துள்ளது குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் வாய்மூடி மவுனம் காப்பது ஏன்….? பதில் சொல்வார்களா… வரலாற்று பிழை சரி செய்யப்படுமா?