பெங்களூரு,

பெங்களூரு கோர்ட்டில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சிறை அதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து, சிறையினுள் சொகுசாக வாழ்ந்து வந்தது, டிஐஜி ரூபாவின் ஆய்வின்போதுதெரிய வந்தது.

இந்த விவகாரத்தில், ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட, சிறை அதிகாரி சத்திய நாராயணராவ், டிஐஜி ரூபா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள ரூபா,மன்னிப்பு கேட்க முடியாது என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு, 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று,  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் இன்னும் சில வி.வி.ஐ.பி-களுக்கு விதிமுறை களை மீறி சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா ஐ.பி.எஸ் துணிச்சலாக  உயர்அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலா சிறையில் சொகுசாக இருப்பதற்காக, சிறைத்துறை ஐஜி சத்திய நாராயண ராவ் உள்ளிட்ட சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக வும் ரூபா தெரிவித்தார்.

இது, கர்நாடக அரசியலில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி-யாகப் பணியாற்றிய ரூபா, போக்குவரத்துப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அதோடு, ரூபாவால் குற்றம் சாட்டப்பட்ட சிறைத்துறை உயரதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். சிறைத்துறை ஐஜி. சத்தியநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இந்சிநிலையில், சிறைறைக்குள் சசிகலா உலாவுவது போன்ற வீடியோ மற்றும், அவர் வெளியே சென்று ஷாப்பிங் சென்று வந்ததுபோன்ற வீடியோக்கள்  வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஐ.ஜி சத்திய நாராயண ராவ், ரூபாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

அதில், “தன் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்காக, ரூபா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பதிலளித்துள்ள ரூபா, “எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது உண்மைதான். ஒரு டி.ஐ.ஜி-யாக நான் எனது கடமையைத்தான் செய்தேன். இதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். எந்த வழக்குகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.

இந்த விவகாரத்தில், விசாரணையின் முடிவில்தான் உண்மைகள் வெளியில் வரும்” என்று கூறி உள்ளார்.