
டில்லி,
டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற 41 நாட்கள் போராட்டத்தின்போது, அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தமிழக விவசாயிகள் கூறினர். பின்னர் மற்றவர்கள் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து மரத்தில் இருந்து இறங்கி வந்தனர்.
இந்நிலையில், தற்போது விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்றிருப்பது டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் மூத்த அதிமுக நிர்வாகிகள் டில்லியில் முகாமிட்டுள்ள சூழ்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயி ஒருவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகளுக்கு ஓய்வூதியம், காவிரி மேலாண்மை வாரியம், விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை ,மத்திய அரசிடம் வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 9 நாட்களாகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகள், இன்றைய போராட்டத்தின் போது, தமிழக விவசாயி சுப்ரமணியன் என்பவர் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இன்று காலை 9 மணிக்குமேல் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சேர்ந்த சுப்ரமணியம் என்ற விவசாயி திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவர் ஆர்எம்எல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அபாய கட்டத்தில் இருந்து தப்பினார் தொடர்ந்து பெற்று வருகிறார்.
இது டில்லியில் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.