சென்னை,
போலி பிரஸ், போலி அட்வகேட், போலி போலீஸ்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இதற்கான அதிரடி நடவடிக்கை தொடங்கும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் ‘போலி’களுக்கு பஞ்சமில்லை. போலியான பொருட்களே அதிக அளவில் வெளி வந்தநிலையில், நாட்டின் மக்கள் தொகைக்கேற்ப போலி மருத்துவர்களும் பெருகி உள்ளனர்.
அதேபோல், பத்திரிகையாளர்கள் பெயரில் போலி பத்திரிகையாளர்கள், போலியான வழக்கறிஞர்கள், போலியான போலீஸ்காரர்களும் பெருகி உள்ளனர்.
இதுபோன்ற ‘போலி’ அடியோடு ஒழித்துக்கட்ட போலீசார் அதிரடி நடடிவக்கையில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து உயர்போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
போலி பத்திரிக்கையாளர்கள் , வக்கீல் , போலீஸ் போர்வையில் சென்னையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வலம் வரும் ஆசாமிகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் சென்னை போன்ற மாநகர, நகர பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் வந்து கொள்ளையடிக்கும் சம்பவமும் அதிகரித்து வருகிறது.
பிரஸ், அட்வகேட், போலீஸ் என்று போலியான ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டிக்கொண்டு ஒருசிலர் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.
இதை தடுக்க சென்னை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளனர். போலீசார் வாகன சோதனையின்போது, பிடிபடுவர்கள், யார் தெரியுமா பிரஸ்சு என மிரட்டுவதும் , வக்கீல் என மிரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது.
இதனால் எதற்கு வம்பு என்று போலீசார் இது போன்ற ஸ்டிக்கர் ஒட்டியுள்ளவர்களை மடக்கு வதில்லை.
அவசர தேவைக்காக செல்லும் பத்திரிகையாளர்கள் போலீசாரின் சோதனைகளுக்கு ஆளாகாமல் விரைவாக செல்வதற்காக பிரஸ் ஸ்டிக்கர் அலுவலகம் மூலமாகவும், அரசு மூலமாகவும் ஒட்டப்படுகிறது. அதுபோல வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் மூலம் ஸ்டிக்கர் வழங்கப்படுகிறது.
போலீசாருக்கு ஸ்டிக்கர் வழங்கப்படுவதில்லை. ஆனால் போலீசார் ஸ்டிக்கர்களை பார்த்து வாகனங்களை பிடிக்காமல் விடுவதை பார்த்து, போலியாக பலரும் போலீஸ் என்று ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.
இதன் காரணமாக, மீடியாவுக்கு , வக்கீல் தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத சுண்டல் விற்பவர் , மளிகை கடை நடத்துபவர் , சாலையோரம் பேப்பர் பிரிப்பவர் , சமூக விரோதிகள் , குற்றவாளிகள் , இரவில் மது அருந்தி விட்டு போகும் போது போலீஸ் மடக்காமல் இருக்கவும் ஸ்டிக்கர்களை ஒட்டி வாகனங்களை ஓட்டுகின்றனர்.
தற்போது சென்னையில் செயின் பறிப்பு மற்றும் வாகன விதிமீறல்களில் இது போன்ற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வாகனம் ஓடுபவர்கள் அதிகம் உள்ளதால் போலீசார் இத்தகைய போலி ஆசாமிகளை களையெடுக்க முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கில் இத்தகைய போலி ஸ்டிக்கர் ஆசாமிகள் வாகனங்களை இயக்கி வருவதால் கடுமையான வாகன சோதனை நடத்தி போலிகளை களைய வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.
விரைவில் கடுமையான சோதனை இருக்கும். இதே போன்றதொரு திருச்சி மற்றும் திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வெற்றிகரமாக ‘போலி’ களை களையெடுத்தனர்.
அதேபோன்று சென்னையிலும் ‘போலி’ களையெடுக்க இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.