சென்னை:
ஏ.டி.பி டென்னிஸ் போட்டித் தொடர் தொடர்ந்து சென்னையிலேயே நடைபெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தெற்காசியாவில் நடைபெற்று வந்த ஏ.டி.பி டென்னிஸ் சென்னை ஓபன் போட்டித் தொடர், திடீரென இந்த வருடம் மகாராஷ்டிரா மாநிலம் புனேக்கு மாற்றப்படுகிறது என்ற வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
இந்தப் போட்டி கடந்த 1997 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 21 ஆண்டுகளாக நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் மேலும் அந்த அறிக்கையில், ‘‘சென்னையில் உள்ள டென்னிஸ் ரசிகர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் வரும் ரசிகர்களால், தமிழகத்திற்கும், சென்னை மாநகரத்திற்கும் பெருமை கிடைத்து வந்தது. இந்தப் போட்டியை நடத்துவதற்கு தொடர்ந்து மாநில அரசின் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்தநிலையில், இந்தப் போட்டி அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருப்பது வேதனையளிக்கிறது’’ என்றார்.
‘‘தமிழகத்தில் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியை புனேக்கு மாற்றி டென்னிஸ் ரசிகர்களையும், தமிழக டென்னிஸ் வீரர்களையும் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாக்குவது ஐ.எம்.ஜி., நிறுவனத்திற்கு அழகல்ல.
வர்த்தக நலன் போன்ற காரணங்களை எல்லாம் கூறி, மாற்ற நினைக்கும் இந்த முயற்சியை கண்டிக்கவோ, தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் மூலமாக அதனைத் தடுத்து நிறுத்தவோ இதுவரையிலும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் தமிழக அரசும் மவுனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.
ஆகவே ஏடிபி டென்னிஸ் ஓப்பன் போட்டியை தொடர்ந்து சென்னையில் நடத்திட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.