டில்லி,
நாட்டில் நடைபெறும் குழந்தைகள் திருமணத்தை தவிர்த்தால் 33 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேமிக்கலாம் என்று உலக வங்கி தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் பரவலாந நடைபெற்று வரும் குழந்தைத் திருமணம், அதேபோல் சிறு வயதிலேயே குழந்தை பேறு உண்டாவது போன்றவற்றை கட்டுப்படுத்தினால், அடுத்த ஏழு ஆண்டுகளில் ரூ.33,500 கோடி ரூபாய் சேமிக்க முடியும் என்று உலக வங்கி மற்றும் பெண்கள் மீதான சர்வதேச ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, உலக வங்கி மற்றும் பெண்கள் மீதான சர்வதேச ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய ஆய்வில், நமது நாட்டில் இளம் வயதினரான 10 வயது முதல் 19 வயதுக்கு இடையிலான வயதினரில் ஏறக்குறைய 17 மில்லியன் பேர் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இந்த இளம் வயது திருமணம் காரணமாக நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக கூறும் ஆய்வு முடிவுகள், இதன் காரணமாக அரசு போடும் பட்ஜெட் மீதான அழுத்தமும் அதிகரித்து வருவதாக கூறி உள்ளது.
மேலும், இவ்வாறு இளம்வயதில் திருமணம் செய்துகொள்பவர்கள், உளவியல் ரீதியாக கடும் பாதிப்பு உள்ளாவதாகவும், அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மேலும் பால்வினை நோய்களும் அதிகரிக்கின்றன என்று குற்றம் சாட்டியுள்ளது.
பெண்கள் சிறு வயதிலேயே கர்ப்பம் தரிக்கும் காரணங்களினால், அனிமியா, மலேரியா, எய்ட்ஸ் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்று உலக சுகாதாரம் மைய ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
எனவே, குழந்தைத் திருமணத்தைத் தவிர்ப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம் அரசுக்கு ஆகும் செலவுகள் குறையும் என்றும், இதன் மூலம் அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியா ரூ.33,500 கோடி (5 பில்லியன் டாலர்) சேமிக்க முடியும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது.