சென்னை
நேற்று முன் தினம் பெய்த மழையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கூரை ஒழுகி குற்றாலம் போல் நீர் கொட்டி உள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்று சென்டிரல் ரெயில் நிலையம். முக்கிய ரெயில் நிலையம் எனப் பெயர்தான் உள்ளதே தவிர பராமரிப்பு என்பது நடத்துவதே இல்லை. அதனால் கூரையில் அங்கங்கே உடைப்புகளும் விரிசல்களும் இருப்பது சகஜமாகிப் போனது.
நேற்று முன் தினம் இரவு பெய்த மழையில் கூரை மிகவும் ஒழுக ஆரம்பித்தது. பல இடங்களில் குற்றால அருவியைப் போல் நீர் கொட்டியது. அதே போல ரெயில் நிலையம் முழுவதும் ஆங்காங்கே சொட்டு சொட்டாக நீர் சொட்டி, பயணிகளையும், லக்கேஜுகளையும் நனைத்துக் கொண்டே இருந்தது.
இது பற்றி மூத்த அதிகாரி ஒருவர் ”கூரையின் கட்டரில் ஒரு பகுதி உடைந்துள்ளது. அதன் காரணமாகவே கூரை பலமாக ஒழுகியது. விரைவில் அது சரி செய்யப்படும்” என கூறினார். ஆனால் டிசம்பர் 2015ல் கனமழையின் போதும் இதேதான் நேர்ந்தது என்பதும் ரெயில் நிலையமே வெள்ளத்தில் மிதந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
”சென்டிரல் நிலையம் உலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையம் என்று சொல்லிக்கொண்டும் அதன் வெளிப்புறத்தை அலங்கரிக்க தனியாரிடம் குத்தகைக்கு விடுவதிலும் ஆர்வம் காட்டும் ரெயில்வே துறை, கூரைய பழுது பார்க்க சிறிதும் ஆர்வம் காட்டுவதில்லை” என மழையில் நனைந்த பயணி ஒருவர் எரிச்சலுடன் தெரிவித்தார்.
இனி வரும் மழைக்காலங்களுக்குள் சரி செய்வார்களா என்பதே ஒவ்வொரு பயணியின் மனதில் உள்ள கேள்வி.