டில்லி,

சீனாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்களால், நமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக மத்தியஅரசு சந்தேகிக்கிறது. இதுகுறித்த தீவிர விசாரணையிலும் இறங்கி உள்ளது.

உலகம் முழுவதும் எலக்ட்ரானிக் சந்தையை ஆக்கிரமித்துள்ளது சீனா. அங்கு தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்களே பெரும்பாலான கருவிகளில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

நமது நாட்டின் தொலைதொடர்பு நிறுவனங்கள் சீன தயாரிப்பு எலக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்தி வருவதன்  காரணமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக மத்தியஅரசு கருதுகிறது.

கடந்த 7ம் தேதி பாரத ஏர்டெல் நிறுவனத்தின் ரேடியோ அலைவரிசையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குளறுபடி ஏற்பட்டது.

அதையடுத்து கடந்த  9ம் தேதி ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தொலைத்தொடர்பு சேவையை பெறுவதற்காக அளிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் ஆதார் தகவல்கள் இணையதளத்தில் கசிந்ததாகக் கூறப்பட்டது.

தொடர்ந்து தேசிய பங்குச்சந்தை தொழில்நுட்ப கோளாறு காரணமாக  திடீரென நேற்று முடங்கியது.

இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதால், இதுகுறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.

ஏற்கனவே  கந்தாண்டு 32 லட்சம் டெபிட் கார்டுகளின் ரகசிய குறிடீட்டெண் கசிந்ததாகவும், அதன் மூலம் பெரும்பாலான பணப்பரிவர்த்தனைகள் சீனாவில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது.

தற்போது நடைபெற்றுள்ள  தொலை தொடர்பு நிறுவன தாக்குதல்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளது.

தொலைதொடர்பு நிறுவனங்களான  ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் பெரும்பாலும் சீன தயாரிப்பு எலக்ட்ரானிக்  உபகரணங்களையே பயன்படுத்தி வருகன்றன.

இதன் காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக  மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சினை காரணமாக மோதல் உருவெடுத்துள்ள நிலையில், தற்போதைய தொலைதொடர்பு பிரச்சினை சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.