தனக்கு சுப.வீ எழுதிய திறந்த மடலுக்கு, நமது பத்திரிகை டாட் காம் இதழில் பதில் கடிதம் எழுதியிருந்தார் எஸ்.வி. சேகர். அதில் குறிப்பிட்டுள்ள விசயங்கள் குறித்து தற்போது விளக்கம் அளித்திருக்கிறார் சுப.வீ.

அவரது விளக்கம்:

சில  நாள்களுக்கு  முன்  நியூஸ்  7  தொலைக்காட்சியில்,  பாஜக  நாராயணன்,  எழுத்தாளர்  மதிமாறன்  ஆகியோருக்கிடையே   நடைபெற்ற  உரையாடலை யொட்டி,  எஸ்.வி.சேகரின்  காணொளி  வெளியாகி  இருந்தது.   அது  தொடர்பாக

அவருக்கு  நான் எழுதியிருந்த திறந்த மடலும், அதற்கு அவர்,  பத்திரிகை.காம்  இணையத்தளத்தில்  கூறியிருந்த  பகிரங்க  பதிலும்  அனைவரும்  அறிந்ததே.  அதன்  தொடர்ச்சியாகவே  இந்தப் பதிவு இடம் பெறுகின்றது.

என்னுடைய மடல் சமூக அரசியல் தளத்தில் நின்று பலசெய்திகளைப்  பேசியது.

ஆனால் அதற்கு விடையளித்த  அவரோ,  பல்வேறு தனிமனிதத்  தாக்குதல்களை  என்  மீது   தொடுத்திருக்கிறார்.   அரசியலற்ற  தனிமனிதச்  சண்டைகளில்  ஈடுபட  எனக்கு  எப்போதும்   விருப்பமில்லை.  எனவே   இனிமேல்  அவருக்கு  மறுமொழி   கூறிக்கொண்டிருப்பதைத் தவிர்த்துவிட்டு,   சமூக  நீதியில்  அக்கறை  கொண்ட  மக்களுக்கான விளக்கமாய்  இந்தப்  பதிவை நான்  பொது வெளியில்  முன்வைக்கின்றேன்.

“சாதி  மதம் என்பது  அவரவருக்குத்  தாய் தந்தைதான்.  அதாவது  தாய் தந்தை  இருப்பவர்களும்,  மதிப்பவர்களும்  என்  கருத்தை  ஏற்றுக்கொள்வார்கள்”  என்று  எஸ்.வி சேகர்  குறிப்பிட்டுள்ளார்.  அவருடைய  சாதிப்பற்றை   இதனை விடத்  தெளிவாக  வெளிப்படுத்த  முடியாது.   தன்னை முழுமையாக  வெளிப்படுத்திக்  கொண்டமைக்கு  அவருக்கு  நம்  நன்றி.

சுப.வீ.

99  சதவீதம்  மதிப்பெண்  (முதலில்  99.9  சதவீதம்.  இப்போது  அது  99  ஆகக்  குறைந்துவிட்டது)  பெற்ற  பிராமண  மாணவர்களுக்கு  இடம்  இல்லை  மா  ணவர்களுக்கு  இடம்  இல்லை  என்று  நான்  சொன்னது  உண்மை  என்று  மறுபடியும்  கூறியுள்ளார்.   இது கலப்படமற்ற  பொய்  என்பதற்குப்  பெரிய  சான்றுகள்  தேவை  இல்லை.  எந்த ஒரு  கல்வி  நிலையத்தின்  புள்ளி  விவரத்தை  எடுத்தாலும்  உண்மை  புலனாகும்.

“எங்கள்  மூதறிஞர்  ராஜதந்திரி  ராஜாஜி  அவர்கள்  சொன்னதால்தான்  பிராமணர்கள்  ஓட்டு  போட்டு  முதன்முதலாக  திமுக  ஆட்சி  அமைந்தது”  என்று  எஸ்.வி.சேகரால்  கூசாமல்  எழுத  முடிகிறது.   அப்படியானால்,  ராஜாஜி  திமுகவைக்  கடுமையாக  எதிர்த்த  1971  ஆம்  ஆண்டு   மாபெரும்  வெற்றியைத்  திமுக  பெற்றதே  எப்படி?

“பார்ப்பான்  என்ற வார்த்தைப் பிரயோகமே தவறு என்று  நாங்கள் சொல்கிறோம்.  பிராமணர் என்று  பொதுவெளியில்  நாகரிகமாக  அழைக்க விருப்பம்  இல்லாத மதியில்லாதவர்தான்  உங்கள் மதிமாறன்”   என்பது  சேகரின்  கூற்று.   ‘பார்ப்பனர்’  என்பது வசைச் சொல்லோ,  ஒரு குறிப்பிட்ட பிரிவினரை   இழிவுபடுத்தும்  சொல்லோ அன்று.   அவ்வாறு  எவர் ஒருவரையும்  வசை பாடுதல் நம்  பழக்கமும்  அன்று.  தச்சு  வேலை  செய்வோர்  தச்சர் என்று கூறப்படுவதை  போல, குறி பார்ப்போர்,  கணி(சோதிடம்)  பார்ப்போர்,   பார்ப்பார், பார்ப்பனர்  என்று  சங்க காலம் தொட்டு  அழைக்கப்பட்டனர்.  அதனால்தான்  அந்தச்  சொல்லை  அவ்வையார்,  போன்ற  புலவர்களே  சங்க  இலக்கியத்தில்  பயன்படுத்தியுள்ளனர்.

“ஏற்றபார்ப்பார்க்கு  ஈர்ங்கை  நிறையப்பூவு ம் பொன்னும் சொரிந்து” என்கிறது அவ்வையின் பாடல்

(புறநானூறு – 367).

வள்ளுவரும்  ஒரு  குறளில்” மறப்பினும்  ஓத்துக்  கொளலாகும்  பார்ப்பான்/  பிறப்பொழுக்கம்  குன்றக்கெடும்” என்கிறார்.  எங்கள்  பாரதி,  எங்கள்  பாரதி என்று சேகர்  போன்றவர்கள் உயர்த்திப்  பிடிக்கும்  பாரதியார்,  ஓரிடத்தில்,  “நந்தனைப்  போல்  ஒருபார்ப்பான்” என்கிறார்.  இன்னொரு  இடத்தில்,   மிகக் கடுமையாக,  “சூத்திரனுக்கு ஒரு நீதி,  தண்டச்  சோறுண்ணும்  பார்ப்புக்கு  ஒரு  நீதி”  என்கிறார்.

எஸ்.வி. சேகர்

அவ்வை,  வள்ளுவர், பாரதியார் எல்லோருமே மதிமாறனைப்போல மதியில்லாதவர்கள்தானா?

பிராமணன்  என்று  எம் போன்றவர்கள்  குறிப்பிட  மறுப்பதற்கு  ஒரு நியாயமான காரணம் உண்டு.  அச்சொல்லுக்குப்   பிரமனில்  இருந்து  உதித்தவன்  என்று பொருள்.  பிரம்மனையே   நம்பாத  நாங்கள்,  பிராமணனை எப்படி  ஏற்போம்?  பிரமனை  நம்புகிறவர்கள்  கூட  ஒரு  வினாவைத்  தொடுக்கவேண்டும்.  ‘நீங்கள் பிரம்மனிடமிருந்து  வந்தவர்கள்  என்றால்,  நாங்களெல்லாம்  எங்கிருந்து  வந்தவர்கள்   என்று  கேட்க வேண்டாமா?

எனக்கு  ஸ்டாலின்  நண்பர்,  2010  முதல்  மோடியும் நண்பர்  என்கிறார் சேகர்.  இப்போது  என் தம்பி  மனைவிதான்  தமிழக  அரசின்  தலைமைச்செயலாளர்  என்பதையும்  சேர்த்துச்  சொல்லியிருக்கலாம்.    அதிகார  மிரட்டல்  எப்படியெல்லாம்   வெளிப்படுகிறது   பாருங்கள்.  நியூஸ்7  தொலைகாட்சி நெறியாளருக்கும்  ஒரு மிரட்டல் அவரின் பதிலில் உள்ளது. அதன்மூலம்,  இனி   எல்லா   ஊடகங்களும்,  ஊடக  நெறியாளர்களும்  எங்களுக்குப்  பயந்து,  எங்களுக்குச்  சாதகமாகத்தான்  பேச வேண்டும்   என்று  சொல்லாமல் சொல்கிறார்  அவர்.

சேகரின்  கடிதத்தின்  அடித்தளமாக  ஒரு  விருப்பம் இடம்பெற்றுள்ளது.   எப்படியாவது  திமுகவினர்  என்னை  வெளியே  தள்ளிவிட  வேண்டும்  என்பதுதான்  அது.  கழகத்தின்  மீது  நான்  கொண்டுள்ள பற்றும்,  கழகத்  தலைமை  என்னிடம்  கொண்டுள்ள  அன்பும்,   ‘சேகர்களை’   மிகவும்  துன்பப்படுத்துகிறது   என்பதை  நம்மால்  புரிந்து  கொள்ள  முடிகிறது.

‘என்  நண்பர்” ” என் நண்பர்’  என்று கழகச்  செயல் தலைவர்  குறித்து அடிக்கடி குறிப்பிடுகின்றார்.  ஆனால்   2ஜி   தீர்ப்புக்காக   மக்கள் காத்திருக்கிறார்கள் என்று  போகிற போக்கில் எழுதுகிறார்.  ‘தன்  நண்பர்’  மீது  அவர் கொண்டுள்ள நட்பின்  ‘லட்சணம்’  இதுதான்.

இறுதியாக,   என்  மீது  கூறப்பட்டுள்ள  சில  அவதூறுகளைப் பற்றிச் சிலவரிகள் – என்  முதல்  மகனுக்கும்,  இரண்டாவது  மகனுக்கும்  சொந்த சாதியிலேயே  பெண்  எடுத்துள்ளேன்  என்று  வாட்ஸ்  அப்பில்  வந்துள்ளதாம்.  அதனை மேற்கோளாகக்  காட்டிவிட்டு,  ‘ஊருக்கு   மட்டுமே  உபதேசமா?  என்று  கேட்டுள்ளார்.   ஒன்றை  எழுதுவதற்கு  முன்  அந்தச்  செய்தி உண்மைதானா   என்று  சரி   பார்த்து எழுதுவது  பொறுப்புள்ளவர்களின்  கடமை.   அதை  எஸ்.வி.சேகரிடம்  எதிர்பார்க்கக்   கூடாதுதான்!  எனக்கு  இரண்டில்லை,  மூன்று பிள்ளைகள்.  மூவரும்  எந்தெந்தச்   சாதியில்  திருமணம்  செய்து கொண்டுள்ளனர்  என்று  அவர்  விசாரித்துத்  தெரிந்துகொள்ளட்டும்.

‘வாணியச்  செட்டியார்  அறக்கட்டளையில்  உறுப்பினராக’  இருந்ததாகப்  படித்தாராம். நண்பர்  அவர்களுக்கு  ‘அறிவு  நாணயம்’  இருக்குமானால்,  இதனைச்  சான்றுகளோடு  மெய்ப்பிக்குமாறு  கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த  அவதூறுகள்  குறித்தெல்லாம்   நாம்  பெரிதாகக்   கவலைப்பட வேண்டியதில்லை.  நமக்கு வேலை   இருக்கிறது   நிரம்ப!   அதில்  கவனம் செலுத்துவோம்.

இருப்பினும்,  எஸ்.வி.சேகர்  போன்றவர்களுக்குப்  பின்னால்   இருக்கிற வன்முறைக்  கும்பல்,  மதிமாறன்  போன்ற  தோழர்களின்  மீது  ‘குறி’  வைக்கிறதோ  என்ற  ஐயம்  மட்டும்  என்  நெஞ்சில்  ஆழமாக  இருக்கிறது.  கவனம்  தோழர்களே!”

– இவ்வாறு தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளார் சுப.வீ..