அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 850 பேரின் முடிவுகளை ரத்து செய்து அம்மாநில மேல்நிலை கல்வி வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த தேர்வில் அப்ஜக்டீவ் மாதிரி வினாக்களுக்கு விடையளித்த மாணவிகள், மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு 40 முதல் 49 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். இதே மாணவ மாணவிகள் நீண்ட விளக்கமளிக்கும் வகையிலான விடை தாளில் 0 முதல் 3 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளனர். இந்த வித்தியாசம் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து தலா 100 மாணவ மாணவிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு நேரில் வரவழைக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது 2+2+2 போன்ற அடிப்படை கூட்டல் கணக்கு, ஒரு இலக்க பெருக்கல் கணக்கு கூட அவர்களால் சரியான விடையளிக்க முடியவில்லை. பெரும்பாலான மாணவ மாணவிகளுக்கு கிரிக்கெட்டிற்கு ஆங்கிலத்தில் சரியான எழுத்துக்களை எழுத தெரியவில்லை. குஜராத் தலைநகர் என்ன என்ற கேள்விக்கு பலரும் எந்தவிதமான விடையும் அளிக்கவில்லை.
‘‘இதையடுத்து சவுராஸ்திரா மாவட்டத்தை சேர்ந்த தாகொத், மகிசகர், தபி ஆகிய பகுதிகளில் 10 மையங்களில் தேர்வு எழுதிய 850 மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தேர்வில் ஒட்டுமொத்தமாக காப்பி அடித்தற்கான எவ்வித ஆதாரமும் இல்லை.
2 முதல் 5ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான கேள்விகளுக்கு கூட 10ம் வகுப்பு மாணவ மாணவிகளால் பதில் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது அதிர்ச்சியாக உள்ளது’’ என்று குஜராத் மாநில மேல்நிலை கல்வி வாரிய துணைத் தலைவர் தக்கார் தெரிவித்துள்ளார்.
மோசமாக கல்வி அறிவை பெற்றுள்ள இந்த மாணவிகள் எப்படி சரியான விடை அளித்தார்கள் என்பது குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ‘‘அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளும் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், எதிலும் ஒட்டுமொத்தமாக காப்பி அடித்தற்கான ஒரு ஆதாரம் கூட கிடைக்கவில்லை’’ என்று வாரிய உறுப்பினர் புட்டானி தெரிவித்துள்ளார்.