சென்னை

குட்காவை விற்பனை செய்ய தமிழக அமைச்சருக்கும், உயர் அதிகாரிகள் சிலருக்கு ரூ 40 கோடி வரை லஞ்சம் தரப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் அரசுக்கு வருமானவரித்துறை அனுப்பிய கடிதத்துக்கு பதில் வரவில்லை என துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குட்கா உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் ஒருவர் அலுவலகத்தில் கடந்த வருடம் நடந்த வருமான வரி சோதனையில் ரூ 40 கோடிவரை, அமைச்சருக்கும், மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் அளித்ததாக ஒரு டாக்குமெண்ட் கிடைத்துள்ளது.   அதன் படி மேலும் விசாரிக்க அனுமதி கடந்த வருடம் 2016ல் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதியன்று தமிழக அரசுக்கு வருமானவரித்துறை ஒரு கடிதம் அனுப்பியுள்ளது , அதற்கு இன்றுவரை அரசு பதிலளிக்கவில்லை.

அரசின் தலைமைச் செயலாளருக்கு அளிக்கப் பட்டுள்ள அந்தக் கடிதத்தில் யார் யாருக்கு எவ்வளவு பணம் எந்தெந்த தேதியில் கொடுக்கப்பட்டது என்பதை தெளிவாக விளக்கியுள்ளது.  அந்த விவரங்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு பெண் கணக்காளர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.  மேலும், அந்த நிறுவனத்தின் பங்குதாரர் மாதவராவ் என்பவர் தமது நிறுவனம் லஞ்சம் அளித்ததை ஒப்புக் கொண்டதாகவும், அந்தப்பணம் அமைச்சருக்கு மட்டுமின்றி,  போலீஸ், சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை, உணவுக்கட்டுப்பாட்டுத்துறை, செண்ட்ரல் எக்சைஸ் ஆகிய துறைகளில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கும் கொடுக்கப்பட்ட விவரங்களையும் தெரிவித்துள்ளார்.

இவை தற்செயலான செலவினங்கள் என்னும் வகையில் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டில் குட்கா தயாரிப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றம் என்பதால் தங்களுக்கு இப்படி பணம் கொடுத்தே ஆகவேண்டி இருந்ததாக ராவ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மற்றும் பல துறைகளின் உயர் அதிகாரிகளும் சம்மந்தப்பட்டிருப்பதால் அரசின் ஒப்புதல் இன்றி மேற்கொண்டு விசாரணையைத் தொடரமுடியாமல் வருமானவரித்துறை உள்ளது.

நன்றி: தி இந்து