கைது செய்யப்பட்ட 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல்

நாமக்கல்,

சேலம்  நாமக்கல் அருகே அரசு ஊழியரை ஆசைக்காட்டி, மிரட்டி நிர்வாணமாக்கி படம் எடுத்து, பண பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே  டவுன் வி.நகர் ரோடு பகுதியில் வசித்து வருபவர் கருணாநிதி. இவர்  புதுச்சத்திரம்  ஏளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்மசிஸ்டாக வேலை செய்து வருகிறார்.

இந்த அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு ராசிபுரம் அருகே உள்ள வையப்பமலையை சேர்ந்த தறித்தொழிலாளி ஒருவரின்  மனைவி அடிக்கடி சிகிச்சை  என்ற பெயரில் வந்து, கருணாநிதியுடன் சகஜமாக பழகி உள்ளார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 10ந்தேதி கருணாநிதியிடம், தனதுக்கு ஒரு தீராத பிரச்சினை உள்ளது. அதை நீங்கள்தான் தீர்க்க வேண்டும் என்றும், அதுகுறித்து  இங்கே பேச முடியாது, ஆகவே கவுண்டம்பாளையம் ஏரிக்கரை அருகே வந்துவிடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த பெண்ணின் பேச்சை நம்பி கருணாநிதி, அன்று மாலை நேரத்தில் ஏரிக்கரைக்கு சென்று, அங்கே தனியா நின்றுகொண்டிருந்த  அந்த பெண்ணிடம் என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார்.

அப்போது, மறைவில் இருந்து,  திடீரென அந்த பெண்ணின் கணவன் உள்பட நான்கைந்துபேர் வந்து, கத்தியை காட்டி மிரட்டி, கருணாநிதியின் உடைகளை களைய செய்து, நிர்வாணமாக்கி  மொபைல் போனில் போட்டோ, வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர், அந்த படத்தை கருணாநிதியிடம் காட்டி, இந்த படத்தை வெளியிடாமல் இருக்க  ரூ.5 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் இந்த படத்தை வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவோம், இதனால் உனது வேலை காலியாகி விடும் என்று மிரட்டி உள்ளனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த கருணாநிதி, அவர்களின் மிரட்டலுக்கு பயந்து பணம் தர ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, முதல் தவனையாக அன்று இரவு ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் அவ்வப்போது 2 லட்சம், 1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம்  பணம் கொடுத்துள்ளார்.

ஆனாலும், அவர்களின் மிரட்டல் தொடர்ந்துகொண்டே இருந்தது. மீண்டும் கருணாநிதியை ஏரிக்கரைக்கு வர வற்புறுத்தி உள்ளனர்.

இதையடுத்து உஷாரான கருணாநிதி, தான் ஏமாற்றப்பட்டு, பணம் பறிக்கப்பட்டது குறித்து ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து,  நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின்பேரில், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் மேற்பார்வையில் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், சுப்பிரமணி, மலர்விழி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு அதிரடி விசாரணையில் இறங்கினர்.

இதையடுத்து, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகே நின்றிருந்த விஜயா என்ற அந்த பெண்ணை கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலை தொடர்ந்து , மிரட்டலில் ஈடுபட்டு வந்த, புஷ்பராஜன், தஸ்தகீர், அவருடைய மகன் சலீம்) மற்றும் பெரியமணலியைச் சேர்ந்த டிரைவர் சந்திரசேகர் ஆகிய 4 பேரையும்  கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து.  ரூ.2 லட்சத்து 60 ஆயிரமும், ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி, தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கருணாநிதியை மிரட்டிய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட  இந்த 5 பேர் கும்பல், வசதியானவர்களை கண்காணித்து, அவர்களிடம் பெண்ணை அனுப்பி பழகவிட்டு,  ஆசைக்காட்டி, பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.