மும்பை:
இந்தியா-பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் கிடையாது என்று பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோடு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும், பயங்கரவாதிகள் ஊடுருவலுக்கு துணை புரிகிறது. எனவே, எல்லை கடந்த பயங்கரவாத தாக்குதல் நிறுத்தப்படும் வரை இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேரடி கிரிக்கெட் தொடர் நடைபெறாது என பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற வேண்டுமென்றால் மத்திய அரசின் முடிவை பெறுவது கட்டாயம்.
பிசிசிஐ மத்திய அரசிடம் பலமுறை அனுமதி கேட்டது. ஆனால், மத்திய அரசு திட்டவட்டமாக அதை நிராகரித்து விட்டது. இந்நிலையில் பா.ஜ., தேசிய தலைவரான அமித் ஷாவிடம், இந்தியா -பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறுகையில், ‘‘இந்தியா-பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் கிடையாது’’ என்றார்.