எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவல் மிகவும் புகழ் பெற்றது.
ராஜராஜ சோழன் காலத்தில் நடந்த மிகச் சில நிகழ்வுகள் சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு முழு நீள கற்பனை காவியமாக “பொன்னியின் செல்வன்” நாவலை உருவாக்கியிருந்தார் கல்கி.
இந்த கற்பனை நாவலையே உண்மையான வரலாறு என்று நம்பவோர் இன்றும் உண்டு. ஆனால் நாவலின் ஆகப்பெரும் பகுதி கற்பனை என்பதோடு, சில உண்மைகளை நாவலில் தெரிவிக்காமலும் சுவாரஸ்யத்துக்காக விட்டுவிட்டார் கல்கி.
அதில் ஒன்று, ராஜராஜ சோழனின் தமையன் அதித்யனின் கொலை குறித்த தகவல்.
ஆதித்யனை கொன்றது யார் என்ற சந்தேகத்தேடு “பொன்னியின் செல்வன்” நாவலை முடித்திருப்பார் கல்கி.
ஆனால் ஆதித்யனை கொன்றது ஐந்து பிராமணர்கள் என்பது வரலாறு. இது குறித்து கல்வெட்டில் குறிப்பிட்டிருக்கும் ராஜராரஜன், அந்த ஐவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறான்.
இந்த கல்வெட்டு கடலுர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பகுதியல் உள்ள அனந்தீஸ்வரர் கோயிலில் உள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்வெட்டு எந்தவித பராமரிப்பும் இன்றி, இருக்கிறது. அதோடு, மெல்ல மெல்ல சிதைக்கப்பட்டு வருகிறது என்பது வேதனை.
அனந்திஸ்வரர் கோயில் கருவறையின் மேற்கு அதிட்டானத்தில் உள்ள இந்த கல்வெட்டு, வழிபாடு என்ற பெயரில் தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருகிறது. இக் கல்வெட்டின் முக்கியத்துவம் அறியாத மக்கள், இதன் மீது விளக்கு ஏற்றியும், கற்பூரத்தை அதன் மேல் ஏற்றியும் தொடர்ந்து சிதைத்து வருகிறார்கள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்வெட்டை பாதுகாக்க அறநிலையத்துறையோ, தொல்லியல் துறையோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் விருப்பம்.
ஆம்.. தமிழரின் வரலாற்றை காப்பாற்ற வேண்டாமா?