ஐதராபாத்:

பக்தி முத்தினால் சில முட்டாள் தனமாக காரியங்களில் பலர் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி நடப்பதுண்டு. அவர் மட்டுமின்றி சுற்றியிருக்கும் மக்களையும் முட்டாள்களாக்கி விடுவார்கள். இந்த வகையில் தெலங்கானா மாநிலத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது பற்றிய விபரம்..

தெலங்கானா மாநிலம் ஜங்கான் மாவட்டம் பெம்பர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் லக்கான் மனோஜ். சாமியார். சிவ பக்தரான இவர் தனது கனவில் சிவன் தோன்றி தனக்கு கோவில் கட்டுமாறு தெரிவித்ததாக மனோஜ் கிராம மக்களிடம் தெரிவித்தார். குறிப்பிட்ட இடத்தில் கோவில் கட்ட சிவலிங்கம் பூமியில் புதைந்திருப்பதாக மனோஜ் தெரிவித்துள்ளார்.

இவரது பேச்சை நம்பிய கிராம மக்கள் நூறு பேர் சிவனை தரிசனம் செய்ய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறைந்த பகுதியில் பள்ளம் தோண்டினர். வாராங்கல்&ஐதராபாத் இடையிலான நெடுஞ்சாலையின் மைய பகுதியில் பள்ளம் தோண்டுவதற்கு முன்பு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டுள்ளது.

30 வயதாகும் மனோஜின் பேச்சை நம்பி ஜேசிபி எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டு பணி நடந்தது.
கிராம நாட்டாண்மை, ஜங்கோன் நகராட்சி துணைத் தலைவர் ஆகியோரும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து நாட்டாண்மை கூறுகையில்,

‘‘மனோஜ் ஒரு தீவிர சிவ பக்தர். கடந்த 3 ஆண்டுகளாக இந்த கனவு குறித்து கூறி வருகிறார். கோவில் கட்டவும், சிவலிங்கத்தை தோண்டி எடுக்கவும் உதவி செய்யுமாறு கோரினார். வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று குறிப்பிட்ட இடத்தில் அவர் பிரார்த்தனையில் ஈடுப்பட்டு வந்தார். மனோஜ் பேச்சை நம்பி நாங்கள் இங்கே கூடியுள்ளோம்’’ என்றார்.

இவர்கள் சாலையின் மத்தியில் சுமார் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிவிட்டனர். ஆனால் சிவ லிங்கம் கிடைக்கவில்லை. இது குறித்து கேள்விபட்ட தெலங்கானா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மனோஜ், நாட்டாண்மை மற்றும் 5 பேரை கைது செய்தனர். பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.