சென்னை:
திநகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கடந்த ஒரு வாரமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
இந்நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டடத்துக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக சேவகர் டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
தமிழகத்தில் சட்டவிரோதமாகவும் விதிமுறைகளுக்கு முரணாகவும் கட்டப்படும் கட்டிடங்களை இடிக்க உத்தரவிடக் கோரி பல வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளேன். உயர் நீதிமன்றம் இந்த வழக்குகளில் அரசுக்கு உத்தரவிட்டும் அரசுத் தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதனால், பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில், வடபழனியிலும், தற்போது சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் கடுமையான தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இந்த 2 விபத்துகளிலும் சிக்கிய கட்டிடங்கள் 100 சதவீதம் விதிமுறைகளுக்கு முரணாக கட்டப்பட்டவை.
ஏற்கனவே, சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அந்த கட்டிடங்களை சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த விஷயத்தில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் கொண்டு வந்த வாகனங்களை நிறுத்தக்கூட இடம் இல்லை.
கட்டிடம் அனைத்து விதிகளுக்கு உட்பட்டு உரிய அனுமதியுடன் கட்டப்பட வேண்டும். அதன் பிறகு அந்த கட்டிடத்திற்கு சிஎம்டிஏ தடையில்லா சான்று கொடுக்க வேண்டும். அதன்பிறகுதான் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு தரப்பட வேண்டும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறை சான்றிதழ் தரவேண்டும். ஆனால், இந்த நடைமுறைகள் எதுவும் சென்னை சில்க்ஸ் நிறுவன கட்டுமானத்தில் கடைபிடிக்கவில்லை.
தற்போது, சென்னை தி.நகரில் விதிமீறி கட்டப்பட்டுள்ள மற்ற கட்டிடங்களைப் பாதுகாக்க அமைச்சர்களும், சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் முயற்சி செய்து வருகிறார்கள்.
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்க மாட்டோம் என்று வீட்டுவசதித் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.
கடந்த 2007க்கு பிறகு இந்த கட்டிடத்தை இடிக்க எந்த தடை உத்தரவும் உயர் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது கட்டிடம் இடிக்கப்படாது என்று வீட்டுவசதி துறை செயலாளர் கூறியிருப்பது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.
அரசு நிர்வாகம் மற்றும் தாங்கள் செய்த தவறிலிருந்து தப்புவதற்காக அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் ஆகியோர் தனித்தனியாக பேட்டியளிக்கிறார்கள்.
சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் மீது ஒட்டுமொத்த பழியையும் சுமத்துகிறார்கள்.
சென்னை சில்க்ஸ் நிர்வாகம் அரசின் நடவடிக்கைக்கு எதிராக தடை உத்தரவு பெற்றுள்ளதாக வீட்டுவசதித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தவறான தகவலை தந்துள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தொடர்ந்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளதால்தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் 2007க்குப் பிறகு எத்தனை கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்ற விவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சென்னையில் சட்டவிரோத கட்டடங்களை வரைமுறைப்படுத்த 4 வாரத்தில் புதிய விதி கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.