டில்லி,

விஎம் எனப்படும் எலக்ட்ரானிக்  வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் கூறியதை தொடர்ந்து, மோசடியை நிரூபிக்க தேர்தல் ஆணையம் சவால் விடுத்தது.

அதைத்தொடர்ந்து, தேர்தல் கமிஷன் முன்னிலையில் இன்று சவாலை நிரூபிக்கும் வேலையில் எதிர்க்கட்சிகள் இறங்கி உள்ளன.

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு அண்மையில் சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளைச் செய்து பாஜக வெற்றி பெற்றதாக பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, சமாஜவாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டி விளக்கமளித்தது. அதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்க முடியுமா? என்று தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுத்தது.

மேலும், இந்தச் சவாலை ஏற்கும் கட்சிகள் அதை ஜூன் 3-ஆம் தேதி முதல் நிரூபிக்கலாம் என்றும் தெரிவித்தது

இந்த சவாலை ஏற்கும் கட்சிகள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது.

அதன்படி தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே தங்கள் பெயர்களை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளன

எனினும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மதர் போர்டு போன்ற பகுதிகளையும் ஆராய்வதற்கு அனுமதிக்குமாறு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதன. எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது

மேலும், தனது சவால் நிகழ்ச்சிக்காக உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத், கௌதம புத்தா நகர், பஞ்சாபின் பாட்டியாலா, பதிண்டா, உத்தரகண்டின் டேராடூன் ஆகிய நகரங்களில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட 14 வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் தில்லிக்கு கொண்டு வந்துள்ளது

இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்குமாறு கோரி உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும், அந்த மனுக்களை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது

இதையடுத்து, தங்களது சவால் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் இதைத் தெரிவித்தார்

அவர் மேலும் கூறுகையில், எங்கள் சவாலை எதிர்கொள்வதற்காக தேசியவாத காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தலா 3 பேரை நியமித்துள்ளன.

அவர்கள் தங்கள் தரப்பை நிரூபித்துக் காட்ட தனித்தனி அறைகள் ஒதுக்கப்படும்.

சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.