மும்பை:

மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர் விவசாயிகள் அமைதி வழியில் போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 5 லட்சம் விவசாயிகள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலவச மின்சாரம், உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலை, பாலுக்கு அதிக விலை உளளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய மறுத்து இந்த போராட்டம் நடக்கிறது.

இது குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறுகையில், ‘‘ விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறேன். விவசாய தலைவர்கள் சம்மதித்தால் கோரிக்கைகள் குறித்து மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸூடன் பேச தயாராகவுள்ளேன். விவசாயிகள் அமைதியான முறையில் போராட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இவரது கருத்துக்கு விவசாயிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘‘ விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சமயங்களில் இவர் வாய் திறக்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தில் பல இடங்களில் விவசாயிகளின் போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து அன்னா ஹசாரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புனே, மும்பை, நாசிக் போன்ற பகுதிகளில் பால், இறைச்சி ஏற்றி சென்ற வாகனங்களை விவசாயிகள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனால் நாசிக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல விவசாயிகள் போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் பட்னாவிஸ் கூறுகையில்,‘‘ சத்தியாகிரக போராட்டம் தான் அனைவரது பிறப்பு உரிமை. அமைதியான வழியில் போராட்டம் நடந்தால் போலீஸ் படை பயன்படுத்தப்படமாட்டாது’’ என்று தெரிவித்துள்ளார்.