புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபையில், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு காங்கிரசார் வாழ்த்து தெரிவித்து பேசினர்.
இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின் போது பேசிய முதல்வர் நாராயணசாமி, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் ஊழல்வாதிகள் என சமூகவலைதளத்தில் கூறி வருகிறார். அவர் இதை நிறுத்தி கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை 2000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, வழக்குகள் விரைவாக விசாரிக்க புதுச்சேரி மாநிலத்திற்கு தனியாக உயர்நீதி மன்றம் கொண்டு வர மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அதைத்தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற வைரவிழா தொடர்பாக அவருக்கு சட்டசபையில் பிறந்தநாள் வாழத்து தெரிவித்து பேசினார்.
திமுக தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கருணாநிதியை வாழ்த்தி பேசினர்.