சென்னை:
சென்னை தி.நகர் பகுதியில் தீப்பிடித்து எரியும் சென்னை சில்க்ஸ் & குமரன் தங்க மாளிகை உட்பட விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். தீ விபத்து ஏற்படவும், விபத்தால் ஏற்பட்டிருக்கும் சேதம் அதிகரித்திருப்பதற்கும் இதுவே காரணம். ஆனால் அப்பாவியான தாங்கள் அகதிகளாக வெளியேறிக்கொண்டிருக்கிறோம் என்று அப்பகுதி வாசிகள் ஆதங்கப்படுகின்றனர்.
தற்போது தீ பிடித்து எரியும் தி.நகர் சென்னை சில்கஸ் & குமரன் தங்கமாளிகை கட்டிடம் 104 மீட்டர் உயரம் கொண்டது. மொத்தம் 7 மாடிகள் உள்ளன.
இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடைக்குள் சிக்கியிருந்த ஊழியர்கள் 15 பேரை மீட்டனர்.
தற்போது இந்த பிரம்மாண்டமான கட்டிடம் சிறிது சிறிதாக சரிந்து விழுந்து கொண்டே இருக்கிறது. தவிர தீ தொடர்ந்து எரிந்து வருவதால் தி.நகர் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. எதிரே அருகில் வரும் வாகனங்களையோ ஆட்களையோ கூட பார்க்க முடியாத நிலை.
தவிர இந்த கடும் புகையால் அந்த பகுதி வாசிகளுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுகிறது.
இந்த கட்டிடம் இருக்கும் பகுதிக்கு அருகில் வசித்த மக்களை தற்போது அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர். தானாக கட்டிடம் இடிவதற்குள் அதை இடித்து அகற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இப்பகுதி வாசிகள், தற்போது அருகில் உள்ள நடேசன் பூங்காவில் பொழுதை கழித்து வருகிறார்கள். பகுதி முழுதும் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. பூங்காவில் அடைக்கலம் புகுந்த மக்கள் உணவோ தண்ணீரோ இன்றி தவிக்கிறார்கள்.
இவர்கள் தெரிவிப்பதாவது:
“தி.நகர் பகுதி முழுதும் வியாபார கேந்திரமாகிவிட்டதால், நிலத்தின் சதுர அடி மதிப்பு மிக அதிகம். ஆகவே இங்கு கடைகளை கட்டும் வியாபாரிகள், சிறிது இடத்தைக்கூட விடாமல் கட்டிடமாக்கி விடுகிறார்கள். அரசு உத்தரவுகளை மதிப்பதே இல்லை.
அதாவது பெரிய அளவிலான கட்டடங்கள் கட்டப்படும் போது அதன் மொத்த நிலப்பரப்பில் 10 சதவீதம் திறந்தவெளிப் பரப்பாக ஒதுக்கப்பட வேண்டும் என்பது அரசு விதி.
மேலும், அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்படும் போது சாலையிலிருந்து குறைந்தபட்சம் 6 மீட்டர் தொலைவு இடம் விட்டுத்தான் தான் கட்டிடம் கட்டப்பட வேண்டும். கட்டிடத்தின் பக்கவாட்டில் தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியாக குறைந்தபட்சம் 20 அடி அகலத்திற்கு பாதைக்காக நிலம் ஒதுக்க வேண்டும்.
ஆனால் இந்த விதிமுறைகள் எவற்றையும் கடை உரிமையாளர்கள் பின்பற்றவது இல்லை” என்று புலம்புகிறார்கள் மக்கள்.
சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சிலரிடம் இது குறித்து கேட்டோம். அவர்கள், “சென்னை சில்க்ஸ் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. ஆகவே கடந்த 2011ம் ஆண்டே உத்தரவிட்டோம். ஆனால் அந்த கடையின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடி தடை வாங்கிவிட்டனர்” என்கிறார்கள்.
“அந்த வழக்கை விரைந்து முடிக்க, சி.எம்.டி.ஏ. தரப்பில் எனஅன நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று கேட்டால் பதில் இல்லை.
பொது மக்கள், “இதே போல திநகரில் நிறைய கட்டிடங்கள் முறைகேடாக கட்டப்பட்டுள்ளன. அங்கு விபத்து ஏற்பட்டாலும் இதே போல பெரும் பாதிப்பு ஏற்படும். இது போல முறையாக ஆய்வு செய்யாமல், விதிகளை மீறி கட்டிடம் கட்டுவதை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த லஞ்ச அதிகாரிகளால் இப்போது நாங்கள் அகதிகளாக அலைகிறோம்” என்று புலம்புகிறார்கள் தி.நகர் மக்கள்.