சென்னை:
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடை களை விற்க மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
விவசாய தேவைக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடையாணை மூலம் மாட்டுத் தோல் மூலம் தயாரிக்கப்படும் தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டு ரூபாய் 1 லட்சம் கோடி இறைச்சி வர்த்தகம் முடங்குகிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் ஏறத்தாழ ரூபாய் 20 ஆயிரம் கோடிக்கு தோல் மற்றும் காலனி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 400 தோல் தொழிற்சாலைகளில் சுமார் 2 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வேலை வாய்ப்பை இழக்க வேண்டிய அபாயகர நிலை மதவெறி பிடித்த நரேந்திர மோடி அரசால் ஏற்பட்டிருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கும், தலித் மக்களுக்கும் மற்றும் அனைத்து தரப்பு ஏழைஎளிய மக்களுக்கும் வழங்கி அனுபவித்து வருகிற அடிப்படை உரிமைகளை மத்திய பா.ஜ.க. அரசு பறித்திருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தில் மாடுகள் மாநில அரசின் பட்டியலில் உள்ளன. ஆனால் மிருகவதை தடுப்புச் சட்டம் மத்திய – மாநில அரசுகள் இரண்டும் இயற்றும் பொதுப் பட்டியலில் உள்ளது. இந்நிலையில் மாடுகள் விற்க தடை விதித்திருப்பது மாநிலங்களின் உரிமைகளை பறித்து கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கிற செயலாகும்.
எந்த உணவை உண்ணுவது என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள அடிப்படை உரிமையாகும். இந்த உரிமையை பறிக்கிற வகையில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பது அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும்.
இதன்மூலம் தலித், சிறுபான்மை மக்களுக்கும், அனைத்து தரப்பு ஏழைஎளிய மக்களுக்கும் எதிராக ஒடுக்குமுறையை மத்திய பா.ஜ.க. அரசு ஏவியிருக்கிறது. மாட்டிறைச்சிக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையால் நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான கொதி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இத்தகைய மத்திய அரசின் நடவடிக்கை குறித்து மாநில அரசு கருத்து கூறாமல் அடங்கி, ஒடுங்கிக் கிடக்கிறது. மாநில அரசின் உரிமையை பறிக்கிற இந்நடவடிக்கை குறித்து தட்டிக் கேட்க அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை.
எனவே, மாட்டிறைச்சிக்கு எதிரான மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கையை எதிர்த்தும், அதை தட்டிக் கேட்காத மாநில அரசை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத் துறை தலைவர் ஜெ. அஸ்லம் பாஷா தலைமையில் நாளை (31.5.2017) புதன்கிழமை காலை 11 மணிக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. கே.வீ. தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா திருமதி. விஜயதரணி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, Ex.MLA ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகிறார்கள்.
இதில் மாநில, மாவட்;ட நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் செயல்வீரர்கள் பங்கேற்று மத்திய – மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெற ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.