சென்னை,
திட்டமிட்டப்படி மே 19ந்தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
மாணவர்களுக்கு பிளஸ்2 தேர்வு முடிவுபோல, 10வது வகுப்பு தேர்வு முடிவுகளும் எஸ்.எம்.எஸ். மூலம் முடிவுகள் அனுப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
திட்டமிட்டப்படி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ந்தேதி வெளியாகிறது. தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்ககனவே கொடுத்துள்ள மொபைல் எண்ணிற்கு நேரடியாக அனுப்பப்படும் என்றும், மாணவர்கள் எந்த மொபைல் எண்களை கொடுத்திருக்கிறார்களோ அந்த எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேர்வு வெளியான 10 நிமிடங்களுக்குள் அனைத்து மாணவர்களும் தங்களது மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
தொடர்ந்து மறுகூட்டலுக்கு விரும்பும் மாணவர்கள் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மாலை 5.45 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.
மறுகூட்டலுக்கான கட்டணம் தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு தலா ரூ.305, மற்ற படங்களுக்கு தலா ரூ.205 எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும் 10 ஆம் வகுப்பு சிறப்புத் துணைப் பொது தேர்வு ஜூன் மாத இறுதியில் நடக்கும் என்று அறிவித்துள்ளனர்.