சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஏதோ பரபரப்பான அரசியல் தலைவர் வருவதைப்போல ஏராளமான டிவி மற்றும் பத்திரிகை கேமிராக்கள் குவிந்து கிடந்தன. யார் அந்த விவிஐபி என்று பார்த்தால் காஞ்சிபுரம் மாவட்டம் படூரைச் சேர்ந்த 3 வது படிக்கும் மாணவர் ஆகாஷ்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் அமைந்துள்ளது படூர் கிராமம். அந்த படூர் கிராமத்தில் அமைந்துள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி கடந்த மாதம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி மூட வைத்தனர்.
அந்தக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஆகாஷ் என்ற இரண்டாம் வகுப்பு மாணவன் ‘குடியை விடு படிக்க விடு’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர்தான் நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு வந்திருந்தார்.
“குடியை விடு, படிக்க விடு” என்ற பதாகையைச் சுமந்தபடி வந்து தனது எல்கேஜி படிக்கும் தம்பியை அருகில் அமரவைத்துவிட்டு படபடவென ஆங்கிலத்தில் பேசத் தொடங்கி, முதல்ல ஆங்கிலத்துல பேசிடறேன் அப்புறமா தமிழ்ல பேசறேன்னு சொல்லிட்டு ஆரம்பிக்க அரங்கில் இருந்த ஊடகவியலாளர்கள் தமிழில் பேசினால் போதும், வந்திருப்பது அனைத்தும் தமிழ் ஊடகங்கள்தான் என்று சொல்ல தமிழில் பேசினார்.
” படூர்ல ஒரு டாஸ்மாக் மதுக்கடை ஆரம்பிக்கிறாங்க, அது பக்கத்துல போய் உட்கார்ந்து நான் படிக்கப்போறேன். அமைதியா, காந்திய வழில போராடப்போறேன். நீங்க குடிக்கறதால உங்களோட குழந்தைகள் படிப்பு வீணாகிறது என்பதுதான் என்னோட குற்றச்சாட்டு….என்று தடுமாற்றம் இல்லாமல் சொல்லி முடித்தார்.
வயதுல மூத்த பலர் போராடாம இருக்கும்போது பள்ளி மாணவன் நீங்க ஏன் போராடறீங்க என்று கேட்டதற்கு ” அவங்கதான் எல்லோரும் குடிக்கறாங்களே, அப்புறம் எப்படிப் போராடுவாங்க ?” என்று தடாலடியாக ஆகாஷ் பதில் தர, கேள்வி கேட்பதைவிட்டுட்டு கைதட்டி பாராட்டினார்கள் ஊடகவியலாளர்கள்.
ஒவ்வொரு பதிலுக்கும் பத்திரிகையாளர்களிடம் கைதட்டி பாராட்டுதலைப் பெற்றார் ஆகாஷ்”
பொதுவாக, பத்திரிகையாளர் சந்திப்பின்போது அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் கைதட்டினாலே கடுப்பாகும் ஊடகவியாளர்கள் தாங்களே மெய் மறந்து கைதட்டியது வியப்பு தந்த நிகழ்வு
ஆகாஷிடம் நின்று ஒரு போட்டோ எடுக்க ஒரு பத்திரிகையாளர் விரும்பினார். பக்கத்தில் போய் நின்றதும் ஆகாஷ் அந்தப் பத்திரிகையாளரிடம் கேட்ட கேள்வி ” நீங்க குடிப்பீங்களா ? திடீர் கேள்வியால் அதிர்ச்சியான பத்திரிகையாளர், “இனி நிறுத்திடறேன்பா” என்று சொல்லி சமாளிக்க, “என்னைப் பார்த்த இன்னிக்கு ஒருநாளாவது அட்லீஸ்ட் குடிக்காம இருங்க அங்கிள், நிரந்தரமா நீங்க குடிக்காம இருந்தா அதுதான் எங்களைப் போன்றவர்களின் எதிர்காலம்” என்று மிகப் பக்குவமாகப் பேச பத்திரிகையாளரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துவிட்டது.
மதுவிலக்கு குறித்து பேச முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பேன் என்றும் தெரிவித்தார்.
ஆகாஷ் பேச்சுக்கு கைதட்டுதல் பெருமை அல்ல… அதேசமயம், குடிக்கும் தந்தைகளைத் திருத்த படிக்கவேண்டிய குழந்தைகள் படிப்பை விடுத்துப் போராட வேண்டிய நிலையை உருவாக்கிய தமிழ்நாட்டை ஆண்ட அரசுகள் மற்றும் அதனை மறைமுகமாக இத்தனை ஆண்டுகள் அனுமதித்த நம்மையும் பார்த்து நாமே வெட்கப்படவேண்டும் என்பதன் உள்ளார்ந்த குறியீடாகவே அந்தக் கைதட்டல் சத்தம் எனக்குக் கேட்டது
(வாட்ஸ்அப்)