ஆட்டிசம் பாதித்த விருதுநகர் இளைஞர் ஒருவர் மிருதங்கம் வாசித்து அசத்தி வருகிறார். இவர் ஏற்கனவே மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசால் பாராட்டுப் பெற்றவர்.
‘ஆட்டிசம்’ என்பது ஒரு நோய் அல்ல; மனவளர்ச்சி தொடர்பான ஒரு கோளாறு. இந்தியாவில், 20 லட்சம் பேர் வரை, இக்குறைபாடிற்கு ஆளாகி உள்ளனர் என, கணக்கிடப்பட்டுள்ளது.
உடலில் குறை இருந்தாலும் உள்ளத்தில் குறையில்லாமல் கர்நாடக சங்கீத கீர்த்தனைகளைப் பாடுவதிலும், தாளம் தப்பாமல் மிருதங்கம் வாசிப்பதிலும் தனக்கென தனி பாணியை அமைத்து வருகிறார் விருதுநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் கவுதமன்.
விருதுநகர் என்.ஜி.ஓ.காலனி நேரு பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் – கீதா தம்பதியின் ஒரே மகன் கவுதமன்.
இதுகுறித்து அவரது பெற்றோர் கூறியதாவது,
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட கவுதமனுகு தற்போது 33 வயதாகிறது, சிறுவயதிலேயே இசையில் ஈடுபாடு கொண்டுள்ள கவுதமன் அழ ஆரம்பித்தால் அவனது அழுகையை அழுகையை நிறுத்தவே முடியாது.
அப்போது அவனை சமாதானப்படுத்த ரேடியோவில் பாடலைப் போட்டு அருகில் வைப்போம். அப்போது ஒருசில பாடல்களை கேட்கும்போது அவன் அழுகையை நிறுத்தி விடுவான். குறிப்பாக கர்நாடக சங்கீதம் பாடும்போது கவுதமன் அழுகை நிறுத்திவிட்டு சங்கீதத்தை ரசிக்க ஆரம்பித்து விடுவான். அதற்கேற்றால்போல அவனது கை, கால்களையும் ஆட்டுவான்.
பின்னர் நாடளடைவில் வீட்டில் இருந்த டப்பா, பாத்திரங்களை அடுக்கி வைத்து குச்சியை தட்டி இசையமைப்பதுபோல செய்து வந்தான். அவனது இசை ஆசையை மெருகூட்ட 8 வயதில் அவனை மிருதங்கப் பயிற்சியில் சேர்த்தோம்.
தொடர்ந்து தஞ்சையில் இருந்தபோது கவுதமனுக்கு மிருதங்கவித்வான் டி.கே.ராமச்சந்திரனிடம் சேர்த்து இசை பயிற்சி பெற்றார். 8 ஆண்டுகள் பயிற்சிக்கு பிறகு அரங்கேற்றமம் நடத்தப்பட்டது.
இந்த அரங்கேற்றத்தில் கவுதமனின் வாசிக்குக்கு அமோக ஆதரவும், பாராட்டும் கிடைத்தது.
தொடர்ந்து காலை, மாலை இசை பயிற்சி மேற்கொள்ளும் கவுதமன் தற்போது கர்நாடக சங்கீதத்தில் ஏராளமான கீர்த்தனைகளையும், பாரதியார், பாரதிதாசன் போன்றோர் பாடல்களும், திரைப்பட பாடல்களையும், தாளம் தப்பாமல் மிருதங்கம் வாசித்தும் அதகளப்படுத்தி வருகிறார்.
தற்போது கவுதமனுக்கு 33 வயதானாலும் 5 வயதுக்கு உரிய மன வளர்ச்சியே உள்ளது. அவருக்கு பற்கள் இல்லாததால் தெளிவாகப் பேச முடியாது. இருந்தாலும், கர்நாடக சங்கீத கீர்த்தனைகளைப் பாடுவதிலும், மிருதங்கம் வாசிப்பதிலும் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார்.
கடந்த 2001ம் ஆண்டு உடல் திறன் குன்றியவர்களுக் கான நிகழ்ச்சி டில்லியில் நடைபெற்றது. அபேபோது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவுதமன் அபாரமாக மிருதங்கம் வாசித்து, அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் பாராட்டைப் பெற்றார்.
மேலும் பல்வேறு சபா நிகழ்ச்சிகளிலும், அரசு விழாக்கள், தனியார் நிகழ்ச்சிகளிலும் பாடியும், மிருதங்கம் வாசித்தும் பார்ப்போரை பரவசப்படுத்தியுள்ளார் கவுதமன்.
ஆனால், தற்போது அவரைப்போன்றோரை ஊக்குவிக்க யாரும் முன்வருவதில்லை. கவுதமனுக்கு உரியஅங்கீகாரமோ, ஊக்கமோ இதுவரை கிடைக்கவில்லை என்றும், அரசு விழாக்கள், பள்ளி நிகழ்ச்சிகளில் கவுதமனை மேடையேற்ற வாய்ப்புக் கொடுத்தால் கவுதமனுக்கும், இதுபோல் ஆட்டிசம் பாதித்தவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியையும் கொடுக்கும் என்றனர்.