நீட் தேர்வு என்பது சமூக நீதிக்கு சவக்குழி வெட்டும் செயல்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்து விட்ட நிலையில் நாடு முழுவதும் நாளை அத்தேர்வு நடைபெறவுள்ளது. நீட் தேர்வால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க, நீட் நல்லது என்று திட்டமிட்டு செய்யப்படும் பிரச்சாரங்கள் கண்டிக்கத்தக்கவை.
‘‘மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு கண்டிப்பாக வேண்டும். இந்தத் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்’’ என்று சில கல்வியாளர்கள் கருத்து கூறியுள்ளனர். தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டுமென்றால் நீட் போன்ற வலிமையானப் போட்டிகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கூறுகிறார். எந்த அடிப்படையில் இந்தக் கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன என்பது தெரியவில்லை. ஆனால், யாருடைய சார்பிலோ திணிக்கப்படுகின்றன என்பதை மட்டும் புரிந்து கொள்ளமுடிகிறது. தமிழ்நாட்டில் 1984 முதல் 2006 வரை 23 ஆண்டுகள் மட்டுமே நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த காலத்தில் மருத்துவப் பட்டம் பெற்று வல்லுனராக உருவெடுத்தவர்களை விட, அதற்கு முந்தைய காலங்களில் மருத்துவப் பட்டம் பெற்று வல்லுனர்களாக உருவெடுத்தவர்கள் அதிகம் என்பதிலிருந்தே, நீட் தேர்வு தரமான மருத்துவர்களை உருவாக்கும் என்பது வெறும் மாயை என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அனைத்தும் அறிந்த கல்வியாளர்கள் கூறுவது வியப்புக்கும், நகைப்புக்கும் உரியதாகும். கிராமப்புற, ஏழை மாணவர்களின் கற்றல் திறனையும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் திறனையும் எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், நீட் தேர்வில் அவர்களுக்கு சமவாய்ப்பு தரப்படுவதில்லை என்பது தான் குற்றச்சாற்று. நகர்ப்புறங்களில் பயிலும் வசதியான மாணவர்கள் புகழ்பெற்ற பள்ளிகளில் பயில்கிறார்கள். ஏராளமான பள்ளிகளில் நீட், ஐ.ஐ.டி கூட்டு நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்கு பயிற்சியளிக்கவும் சேர்த்து ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. தவிர மேலும் பல லட்சம் கட்டணம் செலுத்தி தனியாகவும் பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர். இவர்களையும், எந்த வசதியும் இல்லாத அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணியாற்றிக் கொண்டும், குடும்பத் தொழிலை கவனித்துக் கொண்டும் படிக்கும் மாணவர்களையும் ஒரே போட்டித் தேர்வை எழுத வைப்பது, நீச்சல் தெரியாதவர்களை காலில் கல்லைக் கட்டி கடலில் வீசி, நீச்சல் வீரர்களுடன் நீச்சல் போட்டியில் ஈடுபட வைப்பதற்கு சமமானதாகும்.
தரமில்லாத ஆசிரியர்களால் தான் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள் என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். ஆனால், ஆசிரியர்களே இல்லாத பள்ளிக்கூடங்களும், அதில் படிக்கும் மாணவர்களும் ஏராளமாக இருக்கும் நிலையில், அவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தரமான மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வு அவசியம் என்று அரைகுறை புரிதலுடன் கருத்துக் கூறுவது வேதனை அளிக்கிறது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்படும் என்று கூறப்படுவது தவறு என்றும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டமும், மாநிலப்பாடத்திட்டமும் ஒன்று தான் என்றும் பணி ஓய்வு பெற்ற பிறகும் மத்திய அரசின் கவுரவப் பதவிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாளை பார்த்தார்களா? என்பது கூட தெரியவில்லை. ஒருவேளை பார்த்திருந்தால் 3% மதிப்பெண்ணுக்கான வினாக்கள் மட்டுமே மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மை அவர்களுக்கு புரிந்திருக்கும்.
ஒருவேளை மத்தியப் பாடத்திட்டத்திற்கும், தமிழகப் பாடத்திட்டத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றால், மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வை நடத்தும் பொறுப்பை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையிடம் ஒப்படைக்கும்படி கல்வியாளர்கள் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு செய்வார்களா?
போட்டித் தேர்வுக்கான பயிற்சி என்பது மிகப்பெரிய வணிகமாக மாறி வருகிறது. ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள் நாடு முழுவதும் பயிற்சி மையங்களை அமைத்து மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டி வருகின்றன. இத்தகைய பயிற்சி மையங்களை மாவட்டத் தலைநகரங்கள் வரை விரிவுபடுத்துவதற்கு அந்நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன. அவர்களுக்கு தீனி கிடைப்பதற்காகவே நீட் போன்ற போட்டித் தேர்வுகள் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ நீதிபதிகளும், கல்வியாளர்களும் இந்த விளையாட்டில் பகடைக்காய்களாக மாறி விடுகின்றனர். தரமானக் கல்விக்காக குரல் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு சமூகநீதிக்கு சாவுமணி அடிக்க துணை போகின்றனர்.
தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதையும், ஊழல் செய்வதையும் மட்டுமே முழு நேரத் தொழிலாக கொண்டிருக்கும் அதிமுக பினாமி அரசு, மத்திய அரசை பகைத்துக் கொள்ள விரும்பாததால் தான் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறாமல் விட்டு விட்டது. அதன்மூலம் மருத்துவக் கல்வியில் சமூக நீதிக்கு சவக்குழி தோண்டப்பட்டிருக்கிறது.
நாளை நடைபெறும் நீட் தேர்வில் தமிழகப் பாடத்திட்டத்தை பயிலும் மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள மருத்துவப் படிப்பு இடங்களில் 90 விழுக்காடு இடங்களை மத்தியப் பாடத்திட்ட மாணவர்கள் கைப்பற்றி, தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பொதுத்தேர்வில் 99.90 % மதிப்பெண் பெற்றும், இடம் கிடைக்காமல் ஏமாந்து நிற்கும் போது தான் சமூகநீதி சதி செய்து வீழ்த்தப்பட்டது தெரியும். அப்போது மாணவர்கள் புரட்சி வெடிக்கும்.” – இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.