சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்படாது என்று தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களா, நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் எஸ்டேட்டில் உள்ளது. இங்கு காவல் பணியில் இருந்த ஓம் பகதூர் என்பவரை கடந்த 23ஆம் தேதி நள்ளிரவு கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிப்பதற்காக வந்த மர்ம கும்பல் கொலை செய்ததது. அவருடன் காவல் பணியில் இருந்த கிருஷ்ணா பகதூரையும் மர்ம கும்பல் தாக்கியயது. பிறகு பங்களாவுக்குள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் அவரது நண்பரும், கேரளாவைச் சேர்ந்தவருமான சயான் என்பவருக்கும் இக் கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் இருவரும், வெவ்வேறு சாலை விபத்தில் சிக்கியதில் கனகராஜ் உயிரிழந்தார். சயான் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை நான்கு பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளைக் கும்பல் ஜெயலலிதாவின் 5 கைக்கடிகாரங்கள் மற்றும் கண்ணாடி அலங்கார பொருள்களை மட்டும் கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களாகக் கருதப்பட்ட கேரளாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் இன்னும் தலைமறைவாகியுள்ள ஏழு பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு மற்றும் விபத்து வழக்குகளை நேர்மையான முறையில் விசாரிக்க ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினும், சி.பி.ஐ விசாரணை தேவை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று ( மே 1) சென்னையில் நடைபெற்ற கால்பந்துப் போட்டித் தொடக்க விழாவில் கலந்துகொண்ட டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், “கொடநாடு காவலாளி கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆகவே அதை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றும் திட்டம் ஏதும் இல்லை” என்று தெரிவித்தார்.