கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலம் மால்டாவில் உள்ள பாலூர்காட் சட்டக் கல்லூரியில் கல்லூரியில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற இரண்டாவது செமஸ்டரில் 181 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். 72 பேர் 4வது பருவத் தேர்வு எழுதினர். அதனுடைய முடிவுகள் ஜனவரி 15-ம் தேதி வெளியிடப்பட்டது.

2வது பருவத் தேர்வு எழுதியவர்களில் வெறும் 25 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர். 4வது பருவத்தேர்வு எழுதிய 72 பேரில் ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றார். இதனால் மாணவர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். விடைத்தாள்கள் சரியாக திருத்தவில்லை என்று குற்றம்சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் வெளியாகியுள்ளது. இதில் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விடைத்தாளில் எழுதியுள்ளனர். அதில் காதல் கடிதங்களையும் எழுதி வைத்துள்ளனர். இது மட்டுமில்லாமல் பிரபலமான இந்தி மற்றும் பெங்காலி பட பாடல் வரிகளையும் எழுதியுள்ளனர். அதில் ஆபாசம் எதுவும் உள்ளதா என்பதை எல்லாம் அவர்கள் சிந்திக்காமல் எழுதி உள்ளனர்.

கல்லூரி 4வது பருவத் தேர்வை எழுதிய மாணவர்கள் தான் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் பதில் எழுதிய விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டபோது இதை கண்டு ஆசிரியர்களர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பொறுப்பு இல்லாமல் செயல்பட்ட மாணவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுபோன்று எழுதிய 3 மாணவிகள் உள்பட 10 பேரை 2 வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்து பல்கலைக்கழகம் நிர்வாகம் நடவடிக்கையை எடுத்துள்ளது.

பல்கலைக்கழக துணை வேந்தர் கூறுகையில், “நாங்கள் அவர்களுக்கு 2வது வாய்ப்பாக அவர்களுடைய பதிவு எண்ணை ரத்து செய்யவில்லை. அவர்கள் 2 ஆண்டுகள் கழித்து இதே பிரிவில் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். இவர்களை இப்படியே விட்டால் மற்ற மாணவர்களும் இதுபோன்றுதான் செயல்படுவார்கள்” என்று தெரிவித்தார்.