சென்னை,
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற இருக்கும் டெட் தேர்வு நாளை தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங் கள் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டெட் தேர்வுக்கான விண்ணப்பம் மார்ச் 6ந்தேதி தொடங்கி 22-ந் தேதி வரை விண்ணப் பங்கள் கொடுக்கப்பட்டது.
விண்ணப்பித்தவர்களுக்கு நாளையும், நாளை மறுதினமும் தேர்வு நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வில் 7.4 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, 3,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கண்காணிப்பு பணியில், 18,000 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.
தேர்வு காலை, 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.
முறைகேடுகளைத் தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வுக்குக் காலை 8:30 மணிக்கே வந்து விட வேண்டும். காலை 9:00 மணிக்கு மேல் வருவோர், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
செல்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்து வர அனுமதியில்லை.கல்வித் துறை பணியாளர்கள் மட்டுமின்றிப் போலீசாரும் சோதனையில் ஈடுபடுவர்.
பார்வையற்றவர்களுக்குக் கூடுதல் ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்படும். அவர்கள் தேர்வு எழுத உதவிக்கு ஒருவரை அழைத்து வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.