Despite blood donation by policemen, burglar injured in Delhi encounter dies
என்கவுன்டர் நடத்திய காவலர்களே கொள்ளையனை ரத்தம் கொடுத்து காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனாலும், கொள்ளையனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
வடக்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் புகுந்து, நிதின் என்ற 24 வயது இளைஞன் திருட முயன்றுள்ளான். அப்போது அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ராமஷ்ரே சிங், அசோக் குமார் இருவரும் அவனைப் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது, காவலர்களை கொள்ளையன் நிதின் திருப்பித் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், கொள்ளையனை நோக்கி காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 5 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த நிதின், அம்பேத்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அப்போது அவனைக் காப்பாற்றுவதற்காக என்கவுன்டர் நடத்திய காவலர்களே ரத்தம் கொடுத்துள்ளனர். ஆனாலும், சிகிச்சை பலனளிக்காத நிலையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞன் நிதினின் உயிர் பிரிந்தது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி, என்கவுன்டர் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், அதை நடத்திய காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என வடக்கு டெல்லி காவல் இணை ஆணையர் ராஜேஷ் குரானா தெரிவித்துள்ளார். தற்காப்புக்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என்பதால், காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் தேவையில்லை என அவர் விளக்கமளித்திருக்கிறார்.
மோதல் கொலையும் செய்துவிட்டு, அந்த நபரை ரத்தம் கொடுத்தும் காப்பாற்ற முயன்ற போலீசாரின் ‘கருணை’ உணர்ச்சி பாராட்டப்பட வேண்டியதுதான்!
.