டில்லி:
லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊழலை ஒழிக்க வகை செய்யும் சட்டம் லோக்பால் சட்டம். இந்த சட்டத்தை மத்திய பாரதியஜனதா அரசு தாமதப்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததால், லோக்பால் குழுவை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.
பிரதமர், மத்திய அமைச்சர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஊழல்களை விசாரிக்க வகை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டது லோக்பால் மசோதா.
இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், சட்டத்தின் இயங்கக் கூடிய ஒரு பகுதியே லோக்பால் சட்டம். லோக் ஆயுக்தா, லோக்பால் நியமனங்களை தாமதப்படுத்துவதில் எந்த நியாயமும் இல்லை என்று தெரிவித்துள்ள உச்ச நீதி மன்றம், லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
லோக்பால், லோக் ஆயுக்த பதவிகளை உருவாக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் அதை ஏன் அமலுக்குக் கொண்டுவரவில்லை?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
இது தொடர்பான விசாரணையின்போது, “இந்தச் சட்டத்தை எப்போது, எப்படி அமல் செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்குக் கிடையாது” என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறினார்.
“ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம்” என்று மக்களவைப் பொதுத் தேர்தலின்போது வாக்களித்துத்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது.
ஊழல் செய்யும் பொது ஊழியர்கள் குறித்து சாதாரண பாமரன் புகார் அளித்தால்கூட அது தொடர்பாக விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டிய அதிகாரம் லோக்பால், லோக் ஆயுக்தா ஆகிய அமைப்புகளுக்கு இருக்கிறது.
ஊழலை ஒழிப்பதற்காக கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது லோக்பால் சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும், இதுவரை லோக்பால் குழு அமைக்கப்படாமல் இருந்தது. இந்த அமைப்புகளுக்கு இதுவரை தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. அலுவலக ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.
இதுகுறித்த விசாரணையின்போதுதான் உச்சநீதி மன்றம் லோக்பால் சட்டத்தை உடனே அமல்படுத்த மத்தியஅரசுக்கு உத்தரவிட்டுள்ளது.