டெல்லி:
பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்தனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டம் இன்று 41 வது நாளாக இன்றும் தொடர்ந்தது. கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக மத்திய நிதி அமைச்சகத்தின் பதில் கடிதம் கிடைக்கப்பெற்றால் போராட்டத்தை கைவிடுவது பற்றி அறிவிக்கப்படும் என்று கூறிய அவர்கள், இன்று காலை வரை பதில் கடிதத்தை எதிர்பார்த்தனர். ஆனால் பதில் கடிதம் வரவில்லை.
டெல்லி சென்றுள்ள முதல்-வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து பேசினார். போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு அவரிடம் கோரிக்கை மனு அளித்ததோடு, கோரிக்கைகளையும் விளக்கினார். முதல்வர் பழனிசாமி பேசுகையில், ‘‘விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும். வங்கிக் கடனை ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன். வங்கி கடன் ரத்து தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து அதற்கான நடவடிக்கை எடுக்க வழி செய்வேன்.
வறட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க வழி செய்வோம். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடவேண்டும் என்றார். போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு பேசுகையில் பிரதமர் எங்கள் கோரிக்கைகளை ஏற்றால் போராட்டம் கைவிடப்படும்’’ என்றார். போராட்டத்தை முடிப்பது தொடர்பாக இன்று மாலைக்கு முடிவு எடுக்கப்படும் என்றும் அய்யாகண்ணு கூறினார்.
இந்நிலையில், மே 25ந்தேதி வரை போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுகிறது. மே 25ந்தேதி முதல் போராட்டம் தொடரும் என டெல்லியில் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். போராட்டத்திற்கு ஆதரவளித்த விவசாயிகள், மாணவர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.