Australian travels to Gujarat, finds Adani ‘dangerously powerful’

 

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி

நம்மூர் அதானி குழும் எத்தனை அபாயகரமானது  என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், ஆஸ்திரேலியர் ஒருவர் இதனை மிகச்சரியாக கண்டுபிடித்து கணித்திருக்கிறார்.

 

ஆஸ்திரேலியாவின் குயூன்ஸ்லேண்டில், அதானி குழுமம் நிலக்கரி சுரங்க நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறது. இதற்காக எந்த அளவு வேண்டுமானாலும் நிலத்தடி நீரை உறிஞ்சிக்கொள்வதற்கான அனுமதியையும், குயீன்ஸ்லாண்ட் பகுதி அரசு நிர்வாகத்திடம் அது பெற்றுள்ளது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார் அங்கு நிலத்தடி நீருக்காக போராடி வரும் விவசாயியான ப்ரூஸ் கர்ரி (Bruce Currie).

 

இவருக்கு எப்படி இது தெரிய வந்தது?

 

ப்ரூஸ் கர்ரியின் மகன் குயீன்ஸ்லாண்டில் மாட்டிறைச்சி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். கலிலீ என்ற அந்தப் பகுதியில் (Galilee Basin in Central Queensland) இந்தியாவைச் சேர்ந்த ஜிவிகே ஹேன்காக் (GVK Hancock) என்ற மற்றொரு நிறுவனம் நிலக்கரிச் சுரங்கத்தை விலைக்கு வாங்கி உள்ளது. அந்த நிறுவனம் நிலத்தடி நீரை அளவுக்கு மீறி உறிஞ்சுவதை அறிந்த ப்ரூஸ் கர்ரி குடும்பத்தினர், சட்டரீதியாக எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த நிலையில்தான் அந்தப் பகுதியில் அதானி குழும் தனது காலடியை எடுத்து வைத்துள்ளது.

 

இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனம் அங்கு காலூன்றுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ப்ரூஸ் கர்ரி, அந்நிறுவனம் எப்படிப்பட்டது என்பது குறித்து அறிந்து கொள்ள, அதன் பிறப்பிடமான குஜராத்திற்கே பயணித்திருக்கிறார். குஜராத் சென்ற அவர் அதானி குழுமத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து கேட்டறிந்து, முந்த்ரா, ஹஜிரா போன்ற பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்றிருக்கிறார். அந்த மக்களை நேரில் சந்தித்து கேட்டபோது, அதானி நிறுவனம் தங்களுக்கு இழைத்த கொடுமைகள் அனைத்தையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

 

“அந்த நிறுவனத்தினர் ஒரு பகுதியில் காலூன்றத் தொடங்கும் போது அப்பகுதி மக்களை வீட்டுக்கு வீடு சென்று கதவைத் தட்டி தங்களது திட்டம் பற்றி விவரிப்பார்கள். உங்களது நிலத்தை கொடுங்கள்.. உள்ளூர் வேலை வாய்ப்பைப் பெருக்கிக்காட்டுகிறோம். உங்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புத் தருகிறோம்.. என்றெல்லாம் உருகி, உருகி பேசுவார்கள். கடைசியில் தங்களது வேலை முடிந்த பின் யாருக்கும் எதுவும் செய்ய மாட்டார்கள். பறிக்கப்பட்ட நிலங்கள் போக, நிலக்கரிச் சுரங்கத்தில் இருந்து வரும் மாசு படர்ந்து பக்கத்தில் உள்ள நிலமும் பாழாகி விடுகிறது. வால்ஜி காத்வி என்பவரது பத்து ஏக்கர் நிலம் இப்படித்தான் பாழானது. அதில் பயிரிட்டிருந்த பருத்திச் செடிகளும், எண்ணெய் வித்துகளும் வீணாயின…”

 

என்று கதைகதையாய்ச் சொல்லி ப்ரூஸ் கர்ரியிடம் புலம்பி அழுதுள்ளனர் அப்பகுதி மக்கள்.

 

ஹஜிராவில் அதானி குழுமத்தினர் துறைமுகம் அமைப்பதற்காக அங்கிருந்த மாங்குரோவ் காடுகளை அழித்து விட்டதாகவும், அப்பகுதியில் அவர்களது திட்டங்களால் ஏற்பட்ட மாசு காரணமாக, 90 சதவீத மீன்பிடிப்பை தாங்கள் இழக்க நேரிட்டதாகவும் மீனவர்கள் தாங்கள் சந்தித்த வேதனைகளை விவரித்துள்ளனர்.

 

இவற்றைக் கேட்டு அதிர்ந்து போன ப்ரூஸ் கர்ரி, தாம் நினைத்ததை விட பயங்கரமானதாக அதானி குழுமம் இருப்பதாக கூறியுள்ளார். அதானி குழுமத்தின் அடாவடியால், தங்கள் சொந்த மண்ணைவிட்டு அகதிகளாக புலம் பெயர்ந்த மக்களின் கதைகளை அப்பகுதியில் ஏராளமாக கேட்க முடிவதாகவும் அவர் கலக்கத்துடன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜிவிகே ஹென்காக் நிறுவனத்திற்காக நீதிமன்றப்படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் தமக்கு தற்போது, அதானி குழுமத்திற்கு எதிராக போராட வேண்டிய நிர்ப்பந்தமும் சேர்ந்திருப்பதாக கூறியுள்ளார் ப்ரூஸ் கர்ரி. அதானி குழுமத்தை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்டில் தொடர அனுமதித்தால், தங்களது வாழ்வாதாரமான நிலத்தடி நீரை முற்றிலும் இழக்க வேண்டிய அவலநிலை ஏற்படும் என தன் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் ‘நார்த் குயீன்ஸ்லாண்ட் ரெஜிஸ்டர்’ (North Queensland Register) என்ற பத்திரிகை இந்தத் தகவல்களை வெளியிட்டிருப்பதாக நேஷனல் ஹெரால்ட் ஏடு தெரிவித்துள்ளது.

 

அபாயகரமானது என்று கூறப்படும் இந்த அதானி குழுமத்துடன் தான், ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது, ரூ3000 கோடி மதிப்புள்ள சூரிய ஒளி மின்சக்தி கொள்முதலுக்கான ஒப்பந்தத்தை தமிழக அரசு செய்து கொண்டது.