சென்னை,
மகாபாரதம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கமல்ஹாசன் மே மாதம் 5 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் கமல்ஹாசன், மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இந்திய இதிகாசமான மகாபாரதம் குறித்து நடிகர் கமல்ஹாசன் அவதூறாக பேசியதாக ஆதிநாத்சுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், மே 5-ம் தேதி கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஒருமாத காலம் அவகாசம் கொடுத்தும் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யாத பழவூர் காவல்துறை ஆய்வாளருக்கு நோட்டீஷ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.