ஆப்கனில் பதுங்கி உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கி உள்ள கட்டிடங்கள் மீது 9, 797 கிலோ (21 பவுண்ட்) மெகா எடை உள்ள மெகா சைஸ் குண்டு போட்டு அமெரிக்கா கடும் தாக்குதல் நடத்தியதாக பெண்டகன்தெரிவித்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் அதன் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதை அடியோடு தகர்க்க அமெரிக்கா முடிவு செய்தது. அதன்படி 9ஆயிரம் கிலோ எடை கொண்ட மெகா சைஸ் குண்டை அச்சின் மாவட்டம் நாங்கார்கரில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளின் அலுவலகத்தின் மீது போட்டுள்ளது.
அதில் அந்தப் பகுதியே அடியோடு நாசமானது. எத்தனை ேபர் தீவிரவாதிகள் இறந்தனர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. எனினும் தீவிரவாதிகளுக்கு பயங்கர உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க நடத்திய தாக்குதலில் பயன்படுத்திய மிகப்பெரிய அணு இல்லாத பெரிய குண்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா, இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களை குறிவைத்துத் தாக்கியும், அதற்கான நவீன ஆயுதங்களை உருவாக்கியும் வருகிறது. அந்த வகையில் கடந்த 2003ஆம் ஆண்டு (GBU-43/B) என்ற பெயருள்ள அணு இல்லாத மிகப்பெரிய இந்த குண்டை அமெரிக்க ராணுவம் தயாரித்தது.
இதுவரை நடைபெற்ற உலகப்போர்களில் பயன்படுத்தப்பட்ட அணு இல்லாத குண்டுகளில் இதுவே மிகப்பெரிய குண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தக் குண்டுக்கு அமெரிக்க ‘அனைத்துக் குண்டுகளுக்கும் தாய்’ (Mother Of All Bombs -(MOAB) என பெயரிடப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு அமெரிக்க விமானப்படையின் ஆராய்ச்சி மையம் இந்தக் குண்டைத் தயாரித்து, விமானத்தில் இருந்து வீசி சோதனையும் செய்து பார்த்துள்ளது.
இந்த மெகா குண்டைத்தான் ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள அச்சின் பகுதியில் முகாமிட்டிருக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளின் முகாம்களின் மீது வீசி, அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. சுமார் 1 லட்சம் பேர் அந்தப் பகுதியில் வசிப்பதாக கூறப்படுகிறது. இந்த குண்டு வீச்சினால், சுமார் ஒருமைல் சுற்றளவு பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
314 மில்லியன் டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் குண்டு வீசப்படும் போது, சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நாசமாகும் எனக் கூறப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட நிலநடுக்க வெடிகுண்டு அல்லது கிராண்ட் ஸ்லாம் பாம்ப் என்ற வெடிகுண்டுக்கு (10,000 கிலோ எடை கொண்டது) பிறகு தற்போது தான் இத்தனை பெரிய எடை உள்ள அணு இல்லாத குண்டு வீசப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.