டெல்லி:
இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள தற்போது வாய்ப்புகள் குறைவு என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் இந்த வார தொடக்கத்தில் இந்தியா வந்திருந்தார். இரு நாடுகளுன் வர்த்தக ரீதியான மேம்பாடுகளை ஏற்படுத்துவது தொடர்பாக தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அவர் ஆஸ்திரேலிய செய்தி ஒளிபரப்பு கழகத்திற்கு அளித்த பேட்டியில்,‘‘ தற்போதைய சூழ்நிலையில் வர்த்த ரீதியிலான ஒப்பந்தம் ஏற்பட சாத்தியமானதாக இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,‘‘ இது தொடர்பான இறுதி முடிவு எடுப்பதில் இரு தரப்பும் வெகு தூரத்தில் இருக்கிறது. இந்தியா அளித்த சலுகைகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லை. இது மதிப்புமிக்க ஒப்பந்தமாக இருக்காது’’ என்றார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,‘‘ இது தொடர்பான நடைமுறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பே ச்சுவார்த்தை குழுவினர் மீண்டும் ஆலோசனையை தொடர்வார்கள். பிரச்னைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. தடங்கல் இல்லா வர்த்தகத்தை மேற்கொள்ளவதற்கு என்னென்ன அம்சங்கள் தேவை என்பது குறித்து ஆராய எனது அலுவலக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
குடியேற்றம் தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் 457 விசா நடைமுறை போன்வற்றில் தளர்வு வழங்கினால் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் ஆஸ்திலேரியாவில் பணிபுரிய வாய்ப்பு ஏற்படும் என்று இந்தியா கருதுகிறது என்று அந்த செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் 2014ம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தை திரும்ப பெற டர்ன்புல் மறுத்துள்ளார். முன்னதாக இந்திய தொழிலதிபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘ இரு நாடுகளுக்கும் இரு வழி வர்த்தகமாக 20 பில்லியன் டாலர் மதிப்பு வர்த்தகம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதற்கு ஏற்ப பொருளாதாரத்தை முன்னேற்ற என்னென்ன தேவை என்பதை ஆராய வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.
டர்ன்புல் இந்தியாவில் கடந்த 12ம் தேதி கூறுகையில், ‘‘முறையான ஒப்பந்தம் இருக்கோ? இல்லையோ? ஆனால் இரு நாடுகளுடனான வர்த்தக அளவு மேலும் உயரும். மோடியும் நானும் பொருளாதார உறவு ஏற்பட சில பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம். தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இல்லை என்றாலும் ஏற்கனவே உள்ள வர்த்தக தொடர்புகள் தொடரும்’’ என்றார்.