ஐதராபாத்:
வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு திரும்பும் தொழிலாளர்களை தங்கம் கடத்தலுக்கு சர்வதேச கும்பல் பயன்படுத்துவாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர்கள் பேச்சை நம் தொழிலாளர்கள் பலர் சுங்கத்துறையிடம் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு, நாடு திரும்பும் தொழிலாளர்களின் விபரங்களை சர்வதேச கடத்தல் கும்பல் சேகரித்து வைத்துள்ளது. இதன் அடிப்படையில் அவர்களை தொடர்பு கொண்டு இலவச விமான டிக்கெட் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறியும், அல்லது உதவி வேண்டும் என்று அணுகியும் தொழிலாளர்களை ஏமாற்றுகின்றன.
இதனை தொடர்ந்து ஒரு பெரிய லக்கேஜ் பையில் பொருட்களை அடைத்து விமானநிலையத்திற்கு வரும் உறவினர்களிடம் ஒப்படைத்து விடுமாறு கூறுகின்றனர். இதை நம்பி தொழிலாளர்கள் அந்த லக்கேஜை பெற்றுக் கொண்டு விமானத்தில் பயணிக்கின்றனர். ஆனால், அந்த லக்கேஜில் தங்க கட்டிகளை மறைத்து வைத்துவிடுகின்றனர்.
இதை அறியாத தொழிலாளர்கள் லக்கேஜை கொண்டு வரும் போது விமானநிலைய சுங்கத்துறை சோதனையில் சிக்கி கொள்கின்றனர். லக்கேஜில் இருக்கும் தங்க கட்டிகள் குறித்து அவர்கள் தெரியாமல் தவிக்கின்றனர். செல்போன் பேட்டரி, ப்ளாஷ் லைட், காஸ் ரெகுலேட்டர் போன்றவற்றில் தங்கத்தை மறைத்து வைத்துவிடுகின்றனர்.
ஐதராபாத் விமான நிலையத்தில் தங்கம் கடத்தி சிக்கியவர்களில் 40 சதவீதம் பேர் இது போன்று அறியாமல் கடத்தி வந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஐதராபாத், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, கடப்பா மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இதில் அதிகம். இதில் 25 சதவீதம் பேர் தங்கம் இருப்பது தெரியாமலேயே கொண்டு வந்து சிக்கியவர்கள். ரூ. 20 லட்சத்துக்கு அதிக மதிப்பிலான தங்கம் கடத்தி வருபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
துபாயில் முகாமிட்டுள்ள எத்தியோப்பியா மற்றும் சீன கடத்தல் கும்பல் இந்த சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. சுங்கத்துறையிடம் சிக்கிய பிறகு அவர்கள் அபராதம் கட்ட முடியாமல் தொழிலாளர்கள் திணறுகின்றனர்.
புலம்பெயர்ந்தவர்கள் உரிமை தன்னார்வலர் பீமா ரெட்டி கூறுகையில், புழம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் இது குறித்து வீடியோ, ஆடியோ, எஸ்எம்எஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விமானநிலையங்களில் இதை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.