டில்லி,
பாஜகவினர் தொடர்ந்து தகிடுதத்த வேலைகளை செய்து கட்சியையும் , அதன் மத்திய, மாநில ஆட்சிகளையும் காப்பாற்ற முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு சமீபத்திய உதாரணம் டில்லி பாஜக தனது டிவிட்டரில் போட்டோவுடன் தெரிவித்திருக்கும் கருத்து பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விசயம் என்னவென்றால் மிகவிரைவில் டில்லி மாநகராட்சியின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தெற்கு டில்லி முனிசிபாலிட்டி தற்போது பாஜக வசம் உள்ளது.
அதை தக்கவைத்துக் கொள்ள துடிக்கும் பாஜக, அங்குள்ள தெருவை எப்படி வைத்திருக்கிறோம் பாருங்கள் என பளபளப்பான,கண்ணாடி போல பளிச் தெருவை ட்விட்டரில் வெளியிட்டிருந்தது.
இந்தப்போட்டோவுக்குக் கீழே, 2 லட்சம் தெருவிளக்குகள் எல் இ டி களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் தெற்கு டில்லி முனிசிபாலிட்டிக்கு கடந்த ஏழு ஆண்டுகளில் ரூ.425 கோடி சேமிப்பாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்கள் பாஜகவின் ட்விட்டரில் இருக்கும் தெருவை பார்த்ததும் குழப்பம் அடைந்தனர். ஏனென்றால் அந்தத் தெரு கனடா நாட்டில் இருக்கும் ரிச்மண்ட் நகரில் இருக்கும் ஒரு தெருவாகும். இது உண்மையா ..என முனிசிபாலிட்டி அதிகாரிகளிடம் போட்டோவுடன் விளக்கம் கேட்ட நெட்டிசன்களுக்கு இதுவரை பதிலில்லை என்கிறார்கள்.
இதெல்லாம் பாஜக வினருக்கு சகஜமானதுதான் என்று தெரிவித்த நெட்டிசன்கள், உதாரணத்துக்கு நான்கை மட்டும் சொன்னார்கள். கடந்த உத்தரபிரதேச தேர்தலின் போது பிரதமர் மோடி கலந்துகொண்ட வாரணாசி பிரச்சாரக்கூட்டத்தை கட் அண்ட் பேஸ்ட் முறையில் மக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் காட்டியிருந்ததை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினர்.
அதுமட்டுமல்ல, கடந்த 2015 ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில், வெள்ளத்தில் மக்கள் சிக்கியிருப்பதை மோடி பார்வையிடுவது போல் கிராபிக்ஸ் செய்து வெளியிட்டதாக மத்திய பத்திரிகை தகவல் துறை மீது குற்றச்சாட்டு இருப்பதையும் அவர்கள் தெரிவித்தனர். .
இதேபோல் பிரதமர் மோடி காக்கி உடையில் தெருவை சுத்தம் செய்வதும் கிராபிக்ஸ்தான் என்றும் நிரூபித்தனர். இதேபோல் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கப் போரில் வீரர்கள் அந்நாட்டுக் கொடியை நிமிர்த்துவது போன்ற போட்டோ புகழ் பெற்றது.
அதை கிராபிக்ஸ் மூலம் அமெரிக்க கொடிக்குப் பதிலாக இந்தியாவின் கொடியை மாற்றியது தொலைக்காட்சி ஒன்றில் விவாதப் பொருளானது.
அப்போது அந்தக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பிட் பட்ரா பதில் சொல்ல முடியாமல் மழுப்பியது போன்ற ஏராளமான நிகழ்வுகளை நடுநிலையாளர்கள் அடுக்குகின்றனர்.
இருப்பினும் பாஜக குறுக்குவழியில் ஆதாயம் தேடத்தான் தொடர்ந்து முயற்சிக்கிறது என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.