உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து நாடு முழுதும் நெடுஞ்சாலை யிலிருந்து ஐநூறு மீட்டர் தூரத்துக்குள் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன.
தமிழகத்திலும் அப்படி மூடப்பட்ட 3000க்கும் மேற்பட்ட கடைகளை, உள் பகுதிக்குள் மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது டாஸ்மாக் நிர்வாகம். மூடப்பட்ட கடைகளின் ஊழியர்கள், ஊருக்குள் இடம் தேடி அலைகிறார்கள்.
அப்படி சில கடைகள் மாற்றப்பட்டபோது, அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பைக் காட்டியதால் கடை துவங்கப்படவில்லை. இதே நிலைதான் தமிழகம் எங்கும்.
இந்த நிலையில், திருப்பூர் பகுதியிலும் மூடப்பட்ட மதுக் கடைகளை வேறு பகுதிகளுக்கு மாற்றும் முயற்சி தீவிரமாக நடந்துவருகிறது.
இதை எதிர்த்து ஒரு வித்தியாசமான எச்சரிக்கை நோட்டீஸ் திருப்பூர் பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த வாசகங்கள் அடங்கிய பதிவுகள் சமூகவலைதளங்களிலும் பரவிவருகிறது.
அது இதுதான்:
“திருப்பூரில் சாராய கடைக்கு வாடகைக்கு இடம் கொடுப்பவா்கள் கவனத்திற்க்கு.
தினமும் கடை முன் விழுந்து கிடப்பவா்களை சரக்கு ஆட்டோவில் ஏற்றி உங்கள் விட்டு வாசலில் படுக்க வைப்போம்.
உங்கள் கடையில் கடைசியாக சரக்கு அடித்து சாகும் நபாின் சடலத்தை உங்கள் வீட்டு வாசலில் வைத்த பிறகு தான் அடக்கம் செய்யப்படும்.
உங்கள் கடையில் சரக்கு அடித்து குடும்பத்தை தெருவில் விட்டால் அவா்கள் குடும்பத்தை கூட்டி வந்து மண் அள்ளி உங்கள் குடும்பம் நாசமாக போக சாபம் விடப்படும்.
குடிகாரான் மனைவி மற்றும் பிள்ளைகள் குடியின் கொடுமை தாங்காமல் குடும்பம் பிாிந்தால் உன் குடும்பமும் அதே கதிக்கு தான் ஆளாகும்.
இதை படித்துவிட்டு போங்கட என்று பணம் தான் முக்கியம் என்று கடை கொடுத்தால் ஒரு லோடு மனித கழிவை எங்கள் சொந்த செலவில் உன் வீட்டு வாசலில் கொட்டுவோம்.
இப்படிக்கு
திருப்பூா் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள்.”