புபனேஸ்வர்,
தனது சகோதரியை மாநிலங்களவை உறுப்பினராக்கப் போவதாக சொல்லப்பட்ட புரளியை நவீன் பட்நாயக் மறுத்துள்ளார்.
தனது அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அரசியலில் ஈடுபட அவருக்கு நாட்டமில்லை என்றும் நவீன் விளக்கமளித்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பிஜூ ஜனதாதள உறுப்பினராக உள்ள பிஸ்ணு சரண்தாஸ் பதவிக்காலம் முடிகிறது. அவருக்குப் பதிலாக எழுத்தாளரும், முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் மூத்த சகோதரியுமான கீதா மேத்தா மாநிலங்களவை உறுப்பினராவார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே அமெரிக்காவிலிருந்து நவீனின் சகோதரி கீதா மேத்தா புபனேஸ்வர் வந்திருப்பதால் அவர் அரசியலில் ஈடுபடுவது உறுதிதான் என்று கட்சிக்குள் கிசுகிசுக்கப்பட்டது. குடும்ப அரசியல் வேண்டாம் என்று கட்சிக்குள் எதிர்ப்புகளும் கிளம்பின.
இந்நிலையில் தலைநகர் புபனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நவீன்பட்நாயக், யூகங்களுக்கு மறுப்புத் தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது, தனது சகோதரி கீதா மேத்தா உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார். அவருக்கு மாநிலங்களவை உறுப்பினராகவோ அல்லது வேறு பதவியில் அமரவோ விருப்பம் இல்லை என்று நவீன் பட்நாயக் அறுதியிட்டுக் கூறினார்.